

மதுரை: மதுரை உயர் நீதிமன்றக்கிளை எம்பிஎச்ஏஏ சங்கத்தின் தமிழ் இலக்கிய மன்ற விழா நீதிபதி பி.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. மன்றத் தலைவர் கு.சாமிதுரை வரவேற்றார். எம்பிஎச்ஏஏ தலைவர் பி.ஆண்டிராஜ், செயலாளர் டி.அன்பரசு முன்னிலை வகித்தனர்.
விழாவில் நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது: தமிழ் இலக்கியங்கள் அறம் சார்ந்த வாழ்வியலைக் கற்பிக்கின்றன. தற்போது நமது வாழ்வியலின் அறம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதையும் உணர வேண்டும். நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் ஜல்லிக்கட்டில்தான் உள்ளன. ஜல்லிக்கட்டையும், அறம் சார்ந்த வாழ்வியலையும் மீட்டெடுக்கும் பணிகளையும் தமிழ் இலக்கிய மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி பேசினார்.
இதில் ‘இலக்கிய சோலையில் இன்று’ என்ற தலைப்பில் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், தமிழகத்தில் உயர் கல்வியில் மருத்துவம், பொறியியல் உட்பட எந்தப் படிப்பு படித்தாலும் ஏதாவது ஒரு தமிழ் இலக்கியப் பாடம் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்றார். எம்பிஎச்ஏஏ துணைத் தலைவர் கே.பி.கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் இ.பினேகாஸ் உள்ளிட்டோர் பேசினர். முதுவை இளையராஜா நன்றி கூறினார்.