Published : 04 Dec 2016 01:42 PM
Last Updated : 04 Dec 2016 01:42 PM

அணு உலை பூங்காவை கைவிட வேண்டும்: எதிர்ப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

கூடங்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு, அறிவாளர் அரங்கம், அரசியல் அரங்கம் என்று இரு பகுதியாக நடத்தப்பட்டது. மக்கள் சிவில் உரிமை கழகத் தலைவர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். நாணல் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் வரவேற்றார்.

‘முதல் இரு அணுஉலை குளறுபடிகள்’ என்ற தலைப்பில் பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமார் பேசியதாவது:

கூடங்குளம் முதல் அணுஉலை கடந்த 3 ஆண்டுகளில் 32 முறை மூடப்பட்டிருக்கிறது. இதில் அடிப்படை கோளாறு இருக்கிறது. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால், இந்தியா முழுவதும் அணுஉலைகளை அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்று மத்திய அரசு மூடி மறைக்கிறது.

இப்போது முதல் அணுஉலையில் 13,500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாகவும், ரூ.1000 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். அணு உலை நிர்வாகம் ரூ.35 கோடிக்கு டீசல் வாங்கியிருப்பது குறித்து கேட்டால் எந்த பதிலும் இல்லை. முதல் இரு அணுஉலைகளிலும் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இந்நிலையில் 3, 4-வது அணுஉலைகளுக்கான பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

அணுஉலை பூங்கா விவகாரத்தில் தமிழகத்தின் பெரிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் உரிய நிலைப்பாடு எடுத்தால்தான் திட்டம் கைவிடப்படும் நிலை வரும். தமிழக மக்கள் மீது அணுத்தீமையை சுமத்துவதற்கு மத்திய அரசும், ஆளும் வர்க்கமும் துணிந்திருக்கிறது. மக்கள் உறுதியாக இருந்தால் அணுஉலை பூங்கா அமைவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

‘மாற்று எரிசக்தி’ என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, என்.எஸ்.பி. ஒப்பந்தம் குறித்து ஆர்.ஆர். சீனிவாசன், ‘அணுஉலை அரசியலும், ஏகாதிபத்திய நலன்களும்’ என்ற தலைப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற அரசியல் அரங்க நிகழ்வுக்கு அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன், இடிந்தகரை போராட்ட குழுவை சேர்ந்த சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x