Published : 30 Jul 2014 02:18 PM
Last Updated : 30 Jul 2014 02:18 PM

நெல் கொள்முதல் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்காது ஏன்?- பேரவையில் ஜெ. விளக்கம்

நெல் கொள்முதலுக்கு மாநில அரசு ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை எதிர்க்காததன் காரணம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கம் அளித்தார்.

நெல் கொள்முதலுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கை குறித்து இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஆண்டுதோறும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டிற்கான சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1,310 ரூபாய் எனவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1,345 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நெல் பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,310 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 50 ரூபாய் வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,345 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 70 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டு இருந்தேன்.

இதன்படி, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,360 ரூபாயும்; சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,415 ரூபாயும், 1.10.2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதே கொள்முதல் விலை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

தற்போது, மத்திய அரசால் 2014-2015 ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலை 7.7.2014 அன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 1.10.2014 முதல் ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு 1,360 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 1,400 ரூபாயும் கிடைக்கும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறைந்தபட்ச ஆதார விலை என்பது, கரீஃப் பருவத் துவக்கமான 1.10.2014 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பதால், தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை செப்டம்பர் மாத இறுதியில் தான் வெளியிடப்படுவது வழக்கம்.

ஊக்கத் தொகை வழங்குவது குறித்த அரசாணைகள், 2010-2011 ஆம் ஆண்டிற்கு 30.9.2010 அன்றும், 2011-2012 ஆம் ஆண்டிற்கு, 30.9.2011 அன்றும், 2012-2013 ஆம் ஆண்டிற்கு 28.9.2012 அன்றும், 2013-2014 ஆம் ஆண்டிற்கு 26.9.2013 அன்றும் வெளியிடப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மாநிலங்களுக்கு 12.6.2014 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையினை அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கை 16.6.2014 அன்று தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், 2014-2015 ஆம் ஆண்டிற்கான கரீஃப் மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுக்கான ரபி பருவ நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசு அறிவித்தால், பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற மக்கள் நலத் திட்டத்திற்கென மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கான நெல் கொள்முதலுக்கு மட்டுமே மத்திய அரசின் மானியம் வழங்கப்படும் என்றும், அதற்கு கூடுதலாக கொள்முதல் செய்யப் பெறும் நெல்லை இந்திய உணவுக் கழகம் இருப்பு வைப்பதற்காக தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளும் என்றும், ஆனால் அத்தகைய கூடுதல் கொள்முதல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், மத்திய அரசால் பொது விநியோகம் மற்றும், பிற நலத் திட்டங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பயன்படுத்திக் கொள்வது என்பது மாநில அரசின் பொறுப்பே என்றும், அதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதால் தான் இது பற்றி எவ்வித கருத்தையும் இதுவரை நான் தெரிவிக்கவில்லை. எனது தலைமையிலான அரசும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத் தொகை குறித்த மத்திய அரசின் இந்தக் கடிதம் பற்றி ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வெளி வந்த உடன் தி.மு.க. தலைவரும், இந்த மாமன்றத்தின் உறுப்பினருமான மு. கருணாநிதி, வழக்கம் போல ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக, வழங்கி வரும் ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என்றும், அப்படி ஊக்கத் தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும், மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

என டெல்டா விவசாயிகளிடையே ஒரு தேவையற்ற பதற்றத்தை கிளப்பிவிட்டதோடு, தமிழக அரசு இதுவரை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான இந்தப் பிரச்சனையில், மாநில அரசின் நிலைப்பாட்டைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளது என்று எனது தலைமையிலான தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தும் விதமாக கூறியுள்ளார்.

எந்தப் பிரச்சனையிலாவது எனது தலைமையிலான மாநில அரசின் மீது குற்றம் கண்டுபிடிக்க இயலாதா? குறை சொல்ல முடியாதா? என்று பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க. தலைவரும், இந்த மாமன்ற உறுப்பினருமாகிய கருணாநிதி இந்தப் பிரச்சனை பற்றி எதுவும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அவசர அவசரமாக நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டம் என்பது 1997-1998 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001 ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, இதை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தில், அதாவது 1.10.2002 முதல் தான் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.

இதன்படி, இந்திய உணவுக் கழகம் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாத்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரிசி ஆலைகள் மூலமும், தனியார் அரிசி ஆலைகள் மூலமும், நெல்லை அரிசியாக்கி, பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்குகிறது.

இவ்வாறு வழங்கப்படும் அரிசியின் அளவு, மத்திய அரசு வழங்கிட வேண்டிய அரிசியின் பகுதியாக கணக்கிடப்பட்டு, எஞ்சிய அரிசி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். அல்லது அவர்கள் விருப்பப்படி தனியாருக்கும் விற்பனை செய்யலாம். வெளிச் சந்தையில் நெல்லின் விலை அதிகமாக இருக்கும் போது, விவசாயிகள் தங்களின் நெல்லை தனியாருக்கு விற்பனை செய்வார்கள். வெளிச் சந்தையில் நெல்லின் விலை குறைவாக இருக்கும் போது, விவசாயிகள் தங்களின் நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசுக்கு விற்பனை செய்வார்கள்.

இதனால் தான், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல்லின் அளவு ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. 2011-2012 ஆம் ஆண்டு, நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 23.81 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 10.17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம் மற்றும் இதர மக்கள் நலத் திட்டங்களுக்கு என தமிழ்நாட்டிற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள அரிசியின் அளவு ஆண்டிற்கு 35.58 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். நெல் என்று கணக்கு பார்த்தால் இது 52.32 லட்சம் மெட்ரிக் டன் நெல் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை அதிகபட்சமாக 23.81 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது 16.19 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கு இணையானது ஆகும். தமிழ்நாட்டிற்கென மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஓர் ஆண்டிற்கான அரிசியை விட குறைவாகவே நெல் கொள்முதல் செய்யப்படுவதால், மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பின் மூலம் தமிழ் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், கெயில் குழாய் பதிக்கும் திட்டம், மரபணு மாற்ற விதைகள் என பல்வேறு விவசாய விரோத திட்டங்களை முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்த போது, அந்த ஆட்சியில் அங்கம் வகித்து வாய்மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வணிகர்களுக்கு எதிரான சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக் கொள்கையை ஆதரித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, எனது தலைமையிலான மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்று அவசர அவசரமாக அறிக்கை விடுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது. அதே சமயத்தில், இந்த மக்கள் விரோத, விவசாய விரோத நடவடிக்கைகளை தமிழகத்தில் தடுத்து நிறுத்தியது எனது தலைமையிலான அரசு தான் என்பதை பெருமிதத்துடன் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறேன். விவசாய பெருங்குடி மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையிலேயே, நடப்பாண்டிலும் நெல்லுக்கான ஊக்கத் தொகை, குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 70 ரூபாய் வீதமும், சாதாரண ரகத்திற்கு 50 ரூபாய் வீதமும் வழங்கப்படும். அதன் மூலம், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,470 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 1,410 ரூபாயும் 1.10.2014 முதல் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளின் விடிவெள்ளியாக எனது அரசு தொடர்ந்து விளங்கும் என்பதையும் உறுதிபட இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, அரசின் கவனத்தை ஈர்த்துள்ள உறுப்பினர்கள் இது குறித்து கவலைக் கொள்ளத் தேவையே இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x