ஜெ. இறுதி ஊர்வலத்தின்போது சிறப்பான பணி: தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு ஆளுநர் பாராட்டு

ஜெ. இறுதி ஊர்வலத்தின்போது சிறப்பான பணி: தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு ஆளுநர் பாராட்டு
Updated on
1 min read

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு ஆளுநர் வித்யாசாகர் அனுப்பியுள்ள பாராட்டு கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் திடீர் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட உணர்ச்சிகரமான சூழலில் அரசு நிர்வாகம் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் தேவையான ஏற்பாடு களை விரைந்து மேற்கொண்டதைப் பார்த்து பெருமைப்படுகிறேன். அதேபோல், காவல் துறை உதவியுடன் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நடந்த மெரினா கடற்கரையிலும் தேவையான ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து செய்ததும் பாராட்டுக்குரியது. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்காவிட்டால் இறுதிச் சடங்கின்போது அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

அஞ்சலி செலுத்த வந்திருந்த குடியரசுத் தலைவர், பிரதமர், 9 மாநிலங்களின் முதல்வர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் மரபு சார்ந்த கடமைகளை பொதுத்துறை மேற்கொண்டது. இந்த நேரத்தில் பொதுத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அவரது அதிகாரிகள் குழுவினருக்குப் பாராட்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள பாராட்டு கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புகழ்பெற்ற மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய சூழலில் கடந்த 2 நாட்களை கையாள்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும். இந்த இக்கட்டான, கடினமான சூழலை காவல்துறை சிறப்பாக கையாண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா காவல்துறை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்று அறிகிறேன். அவரின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி உரிய முறையில் பிரியா விடை கொடுத்துள்ளனர். சிறந்த முறையில் திட்டமிட்டு அதை செயல்படுத்தியதால்தான் இது சாத்தியமானது.

பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள். இக்கட்டான சூழலில் சிறந்த முறையில் பணியாற்றி இந்தியாவுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்வதற்காக தங்களுக்கும் கடந்த 2 நாட்கள் ஓய்வு உறக்கமின்றி பணியாற்றிய ஒவ்வொரு போலீஸாருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இக்கட்டான சூழலில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளித்து சட்டத்தை மதித்து நடக்கும் கலாசாரத்தையும் ஒழுங்கு மனப்பான்மையையும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எடுத்துக்காட்டியதற்காக தமிழக மக்களுக்கும் ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் ஆகியோரையும் ஆளுநர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in