Last Updated : 18 Dec, 2016 04:05 PM

 

Published : 18 Dec 2016 04:05 PM
Last Updated : 18 Dec 2016 04:05 PM

கைதியின் மன பாரத்தை குறைத்த பெருச்சாளி: பாளை. புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் ருசிகரம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியின் மன பாரத்தை குறைக்க, பெருச்சாளி ஒன்று உதவியது குறித்து, எழுத்தாளர் சோ.தர்மன் சுவாரஸ்ய தகவலை தெரிவித்தார்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி செல்வி மஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தினசரி மாலை 5 மணிக்கு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு நிகழ்வில் ‘எழுத்தும் எனது அனுபவமும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சோ.தர்மன் பேசினார். தனது சிறுகதைகள், நாவல்களுக்கு பல்வேறு களங்களை தேடிச் சென்றதையும், அப்போது விசித்திரமான அனுபவங்களைப் பெற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். அவர் பேசியதாவது:

``போராட்டங்களில் பங்கேற்று, பாளையங்கோட்டை மத்திய சிறை யில் இருந்தபோது, என்னிடம் கைதி கள் பலரும் தங்கள் வாழ்க்கையில் நேர்ந்த சம்பவங்களை கூறுவர். அவையெல்லாம் கதைகள் எழுத உறுதுணையாக இருந்தன.

கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவர், தனிமை சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். பேச்சு துணைக்கு யாரும் இல்லாததால், தனது துக்கங்களை அவரால் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

அவர் அடைக்கப்பட்டிருந்த அறை வழியாக இரவு நேரங்களில் பெருச்சாளி ஒன்று அங்கும் இங்கும் அலைவது வாடிக்கை. அதை கவனித்த அவர், தனக்கு வழங்கப்படும் உணவை தினமும் அதற்கு வைக்க, அதுவும் தினசரி அவரைத் தேடி வரத் தொடங்கியது.

தனது மனதை அழுத்திக் கொண்டிருந்த சோகங்களை மெல்ல அந்த பெருச்சாளி முன் கொட்டத் தொடங்கினார் அந்த கைதி. அவரது மனது இயல்பானதை உணர்ந்தார். 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்குபின் நல்லெண்ண அடிப்படையில் வெளியில் வந்த அவர், கரி வியாபாரம் மேற்கொண்டு, 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

தனது மனமாற்றத்துக்கும், மன பாரம் குறைந்ததற்கும் அந்த பெருச்சாளி தான் காரணம் என, சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையே களமாகக் கொண்டு, நான் எழுதிய கதைக்கு மிகுந்த பாராட்டு கிடைத்தது. பல மொழிகளிலும் இந்த கதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது” என சோ.தர்மன் பேசினார்.

நிகழ்ச்சியில் ஓவியர் சந்ரு, மதிதா இந்து கல்லூரி பேராசிரியர் கருப்பையா, மக்கள் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீரபாலன், சு.கணேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x