தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிக்டாக் பிரபலம் சூர்யா வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு 

சூர்யா | கோப்புப்படம்
சூர்யா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி என்றும், ரவுடி பேபி சூர்யா என்றும் அழைக்கப்படுகிற சுப்புலட்சுமி. ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தவர். கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து ரவுடி பேபி சூர்யாவின் பதிவு குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைதாகினர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை அறிவுரைக் கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் ஆர் எம் டி டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், "பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசியுள்ளார். அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக்டாக் சூர்யா பேசும் காட்சிகளை காண்பித்தார். டிக்டாக் சூர்யாவின் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, விசாரணையை ஆறு வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in