Published : 30 Nov 2022 07:07 AM
Last Updated : 30 Nov 2022 07:07 AM

தமிழக வாக்காளர்களில் 3.62 கோடி பேரின் ஆதார் விவரம் சேகரிப்பு: சத்யபிரத சாஹு தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

சென்னை: தமிழகத்தில் 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் பணிகள் முடிந்ததும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பெற்று, அவை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, இரட்டைப் பதிவு குழப்பங்களை சரி செய்வது, போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்டவற்றுக்காக, வாக்காளர் பட்டியலுடன், ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆக.1-ம் தேதி இப்பணி தொடங்கப்பட்டது. வாக்காளர்கள் இணைய வழியிலும் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பிக்கலாம். அல்லது, வீடு வீடாகவரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம், படிவம் 6-பி பெற்று, அதன் வாயிலாகவும் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இப்பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவுறும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் விவரங்களை இணைப்பதற்காக மொத்தமுள்ள 6.18 கோடி வாக்காளர்களில் 58.73 சதவீதம் பேர், அதாவது 3.62கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் நிலையில், அதனுடன் சேர்த்து, ஆதார் விவரங்களும் பெறப்பட்டு வருகின்றன.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 84.9 சதவீதம், அரியலூரில் 84.3 சதவீதம் ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னை 22 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 27 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். மார்ச் மாதம் இறுதியில் இந்தப் பணிகள் முடிவடையும். அதன் பின்னர், ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். அதைத் தொடர்ந்து அவை இணைக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஏற்கெனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தொகுதி அடிப்படையில் வாக்காளர்கள் ஒப்பீடு செய்யப்பட்டு, அதன்படி 2 இடங்களில் வாக்காளர் அட்டை பெற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாநில தலைமைதேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதில், ஆதார் விவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு சத்யபிரத சாஹு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x