கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூத வாகனத்தில் சந்திரசேகரர் மாட வீதியுலா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை கோயில் தீபத் திருவிழாவில் நேற்று பூத வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர்.படம்: இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை கோயில் தீபத் திருவிழாவில் நேற்று பூத வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர்.படம்: இரா.தினேஷ்குமார்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. பின்னர், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

மூன்றாம் நாள் உற்சவமான நேற்று மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் பூத வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி உற்சவத்தில் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பாடியபடி சிவனடியார்கள் சென்றனர். மாட வீதியில் சுமார் 3 மணி நேரம் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. அப்போது, கற்பூர தீபாராதனை காண்பித்தும், அர்ச்சனை செய்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கிடையில், அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் சன்னதி முன்பாக யாக குண்டம் அமைத்து, சிறப்பு யாகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். பின்னர், மூலவர் மீது 1,008 சங்குகளில் இருந்த புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in