Published : 30 Nov 2022 08:45 AM
Last Updated : 30 Nov 2022 08:45 AM

1400+ போலீஸார் பாதுகாப்பு: கோவையில் வாகன சோதனை தீவிரம் - டிச.6 வரை கூடுதல் கண்காணிப்பு தொடரும்

கோவை பெரியகடை வீதியில் வாகன ஓட்டுநர்களிடம் சோதனை நடத்திய காவல்துறையினர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட தினத்தையொட்டி, கோவை மாநகர் முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிசம்பர் 6-ம் தேதி வரை பாதுகாப்புப் பணி தொடரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி உக்கடம் அருகே, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட வன்முறை, மதக்கலவரமாக மாறியது. கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டன. காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட தினத்துக்கு மறுநாள் நடந்த கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது.

இதில் 58 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நவம்பர் 29-ம் தேதி கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

அதன்படி, நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் 4 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 1,476 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரும் உள்ளனர். உக்கடம், ஆத்துப்பாலம் சாலை, குனியமுத்தூர், போத்தனூர், பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ நிரந்தர சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி, 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. டவுன்ஹாலில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய படி கண்காணிப்பில் ஈடுபட்டனர். டிசம்பர் 6-ம் தேதி வரை தொடர்ச்சியாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x