

சென்னை: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசியநெடுஞ்சாலையின் 8 புறவழிச்சாலைகள், 8 மாதங்களில் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்று பாமக தலைவர் அன்புமணிக்கு மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைமை வெளியிட்ட அறிக்கை: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள8 புறவழிச்சாலைகளில் முதல்கட்டமாக 6 புறவழிச்சாலைகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள்ளாகவும், மீதமுள்ள இரு புறவழிச்சாலைகள் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாகவும் 4 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அன்புமணிஎழுதிய கடிதத்துக்கு பதிலளித்து எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல்களை மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதுதவிர, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, சாலை அறிவிப்பு பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர தடுப்புத் தூண்கள், சாலைகள் சந்திக்கும் மற்றும் பிரியும் இடங்களில் அதற்கான குறியீட்டு கோடுகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள், சாலையோர விளக்குகள் போன்றவை சாலையை அமைத்து பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன.
சாலை பாதுகாப்புக்காக வேறுஏதேனும் நடவடிக்கைகள் தேவைஎன்றால் அவை குறித்து பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது தனியாகவோ அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ நீள சாலை, மரணப்பாதை என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் சாலையாக இருந்தது. அந்த சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் எப்போது நான்குவழிச் சாலையாக மாற்றப்படும் என்று லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர்.
இப்போது அன்புமணி மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள8 புறவழிச்சாலைகளும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட உள்ளன. இதன்மூலம் அன்புமணி மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.