மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் பகுதிகளில் - ரயில் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் பகுதிகளில் - ரயில் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் ஆகியஇடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் முடிவைக் கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் 30 மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 48 மெட்ரோ ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட மெட்ரோ ரயில்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, மாதவரம் தபால் பெட்டியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2 நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம், குறிப்பிட்ட நிலையத்தில் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள்தொகை, செலவு குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும். அந்த வகையில், மீனாட்சி கல்லூரி, டவுட்டன் ஆகிய நிலையங்கள் அமைக்கும் முடிவைக் கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் உத்தேசிக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையம், சரியான சீரமைப்பில் இல்லை. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் (CRZ) உள்ளதால், இந்த நிலையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கடினமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in