

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையை அருகில் சென்று கண்டுகளிக்க ஏதுவாக நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் இந்த மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் இல்லம் எதிரேமெரினா கடற்கரையின் ஆரம்பத்திலிருந்து கடல் முன்பு வரை 263மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலத்துடன் மணற்பரப்பில் இப்பாதை நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத் திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாகச் சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம்.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை பொதுமக்களே அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இத்திட்டத்தின் நோக்கமே சிதையும் நிலை ஏற்பட்டது. இந்நிலை நீடித்தால் மரப்பாதை விரைவில் சேதமடையும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் தவிர, பிறர் அந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தடுக்க, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.