Published : 30 Nov 2022 04:13 AM
Last Updated : 30 Nov 2022 04:13 AM
திருவண்ணாமலை: பாபர் மசூதி இடிப்பு தினத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவலப் பாதை மற்றும் 12 தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். 69 தற்காலிக இடங்கள், 32 அரசு இடங்கள் என மொத்தம் 101 இடங்களில் 226 குழுக்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
54 இடங்களில் பார்க்கிங் வசதி: அன்னதானம் வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் குறித்து எடுத்துரைக் கப்பட்டுள்ளன. 2,700 சிறப்பு பேருந்துகள், 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக 54 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம். பாபர் இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ‘ஆன்லைன்’ மூலமாக பரணி தீபத்துக்கு 500 டிக்கெட் மற்றும் மகா தீபத்துக்கு 600 டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
120 பேருந்துகள்: தேர்களை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையினர் ஓரிரு நாட்களில் சான்றிளக்கவுள்ளனர். இந்து சமய அறநிலைய துறைதான் பாஸ் அச்சிடுகிறது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகரப் பகுதிக்குள் 120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன” என்றார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வரும் டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணா மலை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளன. இதனால் அன்றைய தினம், தி.மலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 17-ம் தேதி இயங்கும். டிசம்பர் 6-ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு இயங்கும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT