Published : 30 Nov 2022 04:17 AM
Last Updated : 30 Nov 2022 04:17 AM
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அண்ணா மலையார் கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அண்ணாமலையார் கோயில், மாட வீதி, திருவண்ணாமலை நகரம், புறவழிச்சாலை மற்றும் மாவட்ட எல்லை என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு செயல்படுகிறது. 11 ஆயிரம் காவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள 18 சோதனை சாவடிகளில் 3 பிரிவுகளாக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண் காணிக்க 60 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கார்த்திகை தீபத் திருவிழாவில் 500 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. 85 ‘மே ஐ ஹெல்ப் யூ பூத்’ அமைத்து, பக்தர்களுக்கு சேவை செய்யப்படும். குற்றச் செயல் தடுப்பு மற்றும் போக்கு வரத்து விதிகளை பின்பற்ற, 50 இடங்களில் எல்இடி திரை மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும்.
குழந்தைகளில் பாதுகாப்பாக 20 ஆயிரம் டேக் (கையில் கட்டுவது) தயாரிக்கப் பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் குழந்தைகள் இறங்கியதும், அவர்களது கையில் டேக் கட்டப்படும். குழந்தைகள் காணாமல் போனால், உடனடியாக அடையாளம் காண முடியும். 12 ஆயிரம் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக 54 கார் பார்க்கிங் வசதி செய்யப் பட்டுள்ளது. 10 ட்ரோன் பயன் படுத்தப்படவுள்ளன. இதேபோல், கலசப்பாக்கம் அருகே பருவதமலை, வந்தவாசி அருகே உள்ள தவளகிரி மலையும் கண்காணிக்கப்படுகிறது.
மாட வீதியில் காவல்துறை யின் வாகனங்கள் நிறுத் தப்படாது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல் துறையினர் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். பரணி தீபம் முடிந்ததும், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தீபத் திருவிழாவை முன்னிட்டு குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கைது செய்யும் பணி நடைபெறுகிறது. ஹோட்டல், விடுதிகள், மடம் உள்ளிட்ட அனைத்து தங்கும் இடங்களில் ஆதார் நகலை பெற்றுக்கொண்டு தங்குவதற்கு அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார். அப்போது, துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT