

வார்தா புயலால் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வார்தா புயலால் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகள் ஆங்காங்கே மரங்கள் வீழ்ந்ததால் சேதமடைந் துள்ளன. சில இடங்களில் சிறு பாலங்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் நடைபாதை பாலங்களும் உடைந்துள்ளன. இதுதவிர, நெடுஞ்சாலைகளில் சாலை விதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தகவல் மற்றும் அறிவிப்பு பலகைகளும் அடியோடு சாய்ந்தன.
புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் ரூ.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்துள்ள மற்ற இடங்களில் விரைவில் பணிகள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.