ராகிங்கை தடுக்க 24 மணி நேர பாதுகாப்புடன் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்: சிஎம்சி நிர்வாகம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: ராகிங்கை தடுக்க 24 மணி நேர பாதுகாப்புடன், கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) படிக்கும் முதலாமாண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி இறுதியாண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,‘‘ராகிங்கில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கெனவே 7 மாணவர் கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

மேலும் 3 மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராகிங்கை தடுக்க கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்புடன், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராகிங்கில் ஈடுபடும் சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை கொடுக்கப்பட்டு, விசா ரணை நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்கள் தங்களது குறைகளை தயக்கமின்றி தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என அதில் தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in