பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தேவைப்படும் பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஏ.வெரோணிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு..

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ (பாலியல்) வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவிகளை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இதனால் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க நடமாடும் ஆலோசனை மையம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி தமிழக அரசு 17.5.2012-ல் அரசாணை பிறப்பித்தது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது பல பள்ளிகளில் பெயரளவில் நடமாடும் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் எனவே, தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணா அமர்வு பிறப்பித்த உத்தரவு.

பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மாணவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் மாணவர்கள் புகார் அளிக்க இலவச போன் எண் 14417 அறிமுகம் செய்யப்பட்டு, அந்த எண் அனைத்து பாடப்புத்தகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரம் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படவும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மனுதாரரின் மனுவை பரிசீலித்து நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் தேவைப்படும் பள்ளிகளில் உள் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாதவாறு கொள்கைகளை உருவாக்கி அந்த கொள்கையின் நகல்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிக்கவும், தீர்வுகாணவும் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். எவ்வாறு தீர்வுகாண வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். அந்தக்குழு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடமாடும் மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in