அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த ‘தமிழ்நாடு கேமிங் அத்தாரிட்டி’ உருவானதா? - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை | கோப்புப் படம்
அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை தொடர்பாக தமிழ்நாடு கேமிங் அத்தாரிட்டி உருவாக்கப்பட்டதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவ.29) சந்தித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். இரு தினங்களுக்கு முன்பு அது காலாவதியாகிவிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

ஓர் அரசாணைக்கூட தமிழக அரசு வெளியிடவில்லை. அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட்ட பின்னர் 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் இருந்தது என்பதை விளக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. குறிப்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதிக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, "ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்ற திறனற்ற திமுக அரசின் நாடகத்தை அம்பலப்படுத்த தமிழக பாஜக கடமைப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 26: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • அக்டோபர் 3: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனுடன் ஆன்லைன் விளையாட்டிற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
  • அக்டோபர் 7: தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
  • அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
  • நவம்பர் 17: அவசர சட்டத்திற்கு இன்னும் அரசாணை வெளியிடாததால் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு நமது கேள்விகள். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை? அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, “தமிழ்நாடு கேமிங் அத்தாரிட்டி” உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா?.

அக்டோபர் 8-ஆம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது" என்று அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in