Published : 29 Nov 2022 03:46 PM
Last Updated : 29 Nov 2022 03:46 PM

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: ஆளுநர் அணுகுமுறைக்கு ஆதரவாக அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "ஒரு சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசியலைமைப்புச் சட்டத்தை சார்ந்திருக்கிறதா? மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகாரங்களை சரியான அளவில் கையாண்டுள்ளனரா? - இதைப் பார்க்க வேண்டிய கடமை ஆளுநருக்கு இருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் மெட்டல் டிடெக்டர் சரியான வேலை செய்யவில்லை என்று எதனை வைத்து குற்றம்சாட்டுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுக்கு எழுத்துபூர்வமாக, பிரதமரின் வந்து சென்றபின் கொடுத்துள்ளனர். அதுதொடர்பாக மாநில காவல் துறையின் உளவுத் துறை காவல் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பிரதமர் தமிழகம் வந்தபோது, எந்தவிதமான நேர்த்தியான பணியையும் செய்யாமல், மாநில அரசே மெத்தனப்போக்குடன் இருந்ததால், உயரதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்குடன் உள்ளனர். உலகத்திலேயே உச்சக்கட்ட அச்சுறுத்தல் இருக்கக்கூடிய தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. எனவே, அவருடைய வருகையின்போது, தமிழகத்தில் சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

அப்போது அவரிடம், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். ஆன்லனை ரம்மிக்கு அடிமையாகி சகோதர, சகோதரிகள் உயிரை மாய்த்துக் கொள்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். இரு தினங்களுக்கு முன்பு அது காலாவதியாகிவிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் காலாவதியாகிவிட்டது என்று தமிழக அரசு கூறுகிறது. அவசர சட்டத்துக்கு ஆளுநர் அனுமதியளித்த பிறகு, இத்தனை காலமாக தமிழக அரசு ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஓர் அரசாணைக்கூட தமிழக அரசு வெளியிடவில்லை. அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையெழுத்திட்டப் பிறகும்கூட தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடந்துகொண்டுதான் இருந்தது. தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பது முதல் உண்மை.

இரண்டாவது, ஓர் அவசர சட்டத்தைக் கொண்டுவந்து, அது ஆளுநரின் பார்வைக்கு வரும்போது, ஆளுநரைப் பொறுத்தவரை பல கருத்துகளைப் பார்க்கிறார். இதில் மிக முக்கியமாக இருப்பது, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள். ஆளுநர் இதுகுறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை. இந்தச் சட்டம் குறித்து ஆளுநர் சில கருத்துகளை மாநில அரசிடம் கேட்டுள்ளார். மாநில அரசு விளக்கம் அளித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆன்லைன் சூதாட்டம் என்பது சைபர் ஸ்பேஸ், அது முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் வருகிறது. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது வருகிறது.

எந்த மாநிலத்திலும் சைபர் ஸ்பேஸிற்குள் மாநில அரசுகள் செல்லவில்லை. தமிழகத்தில் மட்டும், மத்திய அரசுக்கு முழு சுதந்திரம், அதிகாரம் இருக்கக்கூடிய சைபர் ஸ்பேஸிற்குள், மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம், ஆளுநர் தரப்பில் இருந்து சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாக தெரிகிறது. மாநில அரசும் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளது. ஆளுநரிடம் எங்களது தரப்பு நியாயத்தைச் சொல்லியிருக்கிறோம்.

அதாவது, ஆன்லைன் சூதாட்டம் என்பது உடனடியாக முடக்கப்பட வேண்டும். இதனால் எந்த உயிரும் போகக்கூடாது. அதேநேரம், ஒரு சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசியலைமைப்புச் சட்டத்தை சார்ந்திருக்கிறதா? மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகாரங்களை சரியான அளவில் கையாண்டுள்ளனரா? இதைப் பார்க்க வேண்டிய கடமை ஆளுநருக்கு இருக்கிறது. தவறாக இயற்றப்பட்ட ஒரு சட்டம், சட்டமே இயற்றப்படாததற்கு சமம் என்று நீதித் துறையில் கூறப்படுகிறது.

ஆளுநரைப் பொறுத்தவரை, சட்டம் சரியாக உள்ளதா? சரியாக இயற்றப்பட்டுள்ளதா? கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய திருத்தங்களைச் செய்து விளக்கம் அளிக்கின்றனரா? இதையெல்லாம் பார்க்க வேண்டியது ஆளுநரின் கடமை. பொத்தாம் பொதுவாக ஆளுநர் வேலை செய்யவில்லை. ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் இருக்கிறோம்.

அதேநேரம், அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட்ட பின்னர், 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் இருந்தது என்பதை விளக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. குறிப்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x