

சென்னை: தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு, இந்த மனுவுக்கு நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. தன் மீதான முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனக்கு எதிராக இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அளித்திருந்த ஒரு பேட்டியில் மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனை அடிப்படையாக கொண்டே புகார் அளித்திருந்தேன். எனவே எனது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லையென்று செந்தில்பாலாஜி கூறுவது ஏற்புடையதல்ல.
செந்தில் பாலாஜி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது எனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே அந்த தடையை நீக்க வேண்டும். செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.