

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு மே மாதம் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் திருவிழா களைகட்டியிருந்தது. மே 21-ம் தேதி தமிழகத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்த்தப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த நீங்காத வடுவை இன்றும் தமிழகம் சுமந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடையோர் விடுதலை குறித்து, அந்த படுகொலையின்போது படுகாயங்களுடன் உயிர் தப்பிய முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுசுயா, ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம் வருமாறு..
பெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி என்ன நடந்தது? - நான் காஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்தேன். அன்று மாலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வர இருப்பதாகவும், பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அன்று பகல் 12 மணிக்கே எங்கள் அணி பெரும்புதூருக்கு சென்றுவிட்டது. மாலை 6 மணிக்கு மகளிர் அமரும் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே, ராஜீவ் காந்தி பயணித்த விமானம் பழுதானதால், அவர் வருவது சந்தேகம் என தகவல் இரவு 9 மணிக்கு வந்தது. அதன் பின்னர், ராஜீவ் காந்தி வந்துவிட்டதாக கூறி, அங்குள்ள இந்திரா காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்தனர்.
மேடையை நோக்கி ராஜீவ் காந்தி வரும்போது அவரை பெண்கள் உள்ளிட்ட பலர் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் ராஜீவ் காந்தியை நெருங்கவிடாமல் தள்ளினேன். பிறகு எனது தோளில் தட்டிய ராஜீவ், ‘பி ரிலாக்ஸ்' என்று கூறினார். அப்போது கோகிலவாணி என்ற சிறுமி இந்தியில் ராஜீவ் முன்னிலையில் கவிதை படிக்க வந்தார். அடுத்த நொடியில், காதே செவிடாகும் அளவுக்கு குண்டு வெடித்தது. எனது உடலெங்கும் எரிந்தது. இடது கை விரல்கள் துண்டாகி கிடந்தன. உடலெங்கும் ரத்தம் வழிந்தது. அங்கு என்னைச் சுற்றி ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் சடலங்கள், உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. பின்னர் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டு 3 மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தேன்.
நீங்கள் படுகாயம் அடைந்தபோது, உங்கள் குடும்பத்தினர் மற்றும் அங்கு உயிரிழந்தோர் குடும்பங்களின் மனநிலை எப்படி இருந்தது?
அப்போது ஏஎஸ்பியாக இருந்து, இப்போது ஏடிஜிபியாக ஓய்வுபெற்ற ‘பிலிப்'பின் வலது பக்கம் முழுவதும் குண்டு வெடிப்பில் எரிந்துவிட்டது. அவர் படுகாயமடைந்த காலகட்டத்தில்தான் அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அவரது படுகாயம், அவர் மனைவியை கடுமையாகப் பாதித்தது. நான் சிகிச்சையில் இருந்தபோது, எனது தாயும், கணவரும்தான் ஆதரவாக இருந்து, நம்பிக்கை அளித்தனர்.
எனது கணவர் கூறும்போது (அவரும் காவல்துறை அதிகாரி), ‘‘நான் எத்தனையோ பிணங்களை உடற்கூராய்வு செய்ததைப் பார்த்திருக்கிறேன். உனது உடலில் இருந்து குண்டு துகள்களை எடுக்கும் போது, எனக்கு வலித்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது’’ என்றார்.
உயிரிழந்த சந்திராவுக்கு அப்போது ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. அதை பராமரிக்க அவரது கணவர் கடும் சிரமப்பட்டார். அந்த குழந்தை வளர்ந்தும் மனநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியின் பங்கு என்ன?
இந்த குண்டுவெடிப்பில் நளினிதான் முதல் குற்றவாளி. இந்த படுகொலைக்கு அவர்தான் உதவியாக இருந்தார்.
அண்மையில் நளினி அளித்த பேட்டியில், காவல் அதிகாரி அனுசுயா என்னை பார்க்கவே இல்லை என கூறியிருக்கிறாரே?
மகளிர் அமரும் இடத்தை நான்தான் ஒழுங்குபடுத்தினேன். அந்த இடத்தில் நளினி இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அதனால், அவரை நான் பார்க்கவே இல்லை என்று அவர் கூறுவது பொய்.
சம்பவ இடத்தில் இவர்களின் நடமாட்டம் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?
எனக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர்களை நான் விஐபி என்றே கருதினேன். இவர்கள் பேசினால் இலங்கைத் தமிழ் வழக்கு தெரிந்துவிடும் என்பதால், சிவராசன் அரிபாபுவுடனும், சுபா நளினியுடனும் இருந்தனர். எந்தக் கேள்வி கேட்டாலும், நளினியும், அரிபாபுவும்தான் பதில் அளித்தனர்.
நளினி பிரசவத்தின்போது செங்கல்பட்டு மருத்துவமனையில் நீங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தது பற்றி...?
அது எனக்கு வேதனையாகத்தான் இருந்தது. நான் படுகாயமடைய காரணமாக இருந்தவர்களுக்கு, நான் காவல் உடை அணிந்து இருந்ததற்காகவே, எனது வேதனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சட்டத்துக்கு கட்டுப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டேன்.
மத்திய அரசின் மறுசீராய்வு மனு குறித்து?
அது ஒரு கண்துடைப்பு. இவர்கள் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பே அதை செய்திருக்க வேண்டும். வெளியே விட்டுவிட்டு, சீராய்வு மனு தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் செயல். தண்டனை முடிந்து, மனம் திருந்தி வெளியில் வரும் சிறைவாசிகளை, குற்றவாளி எனக் கூறி இழிவுபடுத்தக்கூடாது என அரசு கூறுகிறது. இந்த சூழலில், இவர்களை
குற்றவாளிகள் என்று கூறுவது சரியாக இருக்குமா?
குற்றவாளியை குற்றவாளி என்று தான் கூற முடியும். நீதிமன்றமே குற்றவாளி என்று கூறித்தான் தண்டனை வழங்கியது. சட்ட விதிகளின்படி தண்டனை குறைப்பு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனரே தவிர, நிரபராதிகள் என விடுவிக்கப்படவில்லை.
உங்களுக்கு கொலை மிரட்டல் வருவது பற்றி...?
இரவில் அநாமதேய கைபேசி அழைப்புகள் வருகின்றன. அதை நான் எடுப்பதில்லை. அவர்கள் குரல் ஒலிப்பதிவை வாட்ஸ்அப்பில் அனுப்புகின்றனர்.அதில் அநாகரீகமான வார்த்தைகளில், எனது சாதியைக் குறிப்பிட்டும், பிரபாகரன், நளினி குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்போது என் சார்பிலும், டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.