

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நேற்று முன் தினம் கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இதையொட்டி மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரிய பிரபையில் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை எழுந்தருளி மாடவீதியுலா வந்தனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் நேற்று இரவு மாட வீதியுலா வந்து அருள்பாலித்தனர். வழியெங்கும் மகா தீபாராதனை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் இன்று காலை மாட வீதியுலா வர உள்ளனர். இதையடுத்து, சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் இன்று இரவு எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.