

மதுரை: தமிழகத்தில் பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு பிற துறைகளுக்கு மாற்றப்பட்ட ரூ.265 கோடியைத் திரும்பப் பெறக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த எஸ்.கார்த்திக், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பழங்குடியினர் நலத் துறைக்கு 2018 முதல் 2021 வரை மூன்று நிதியாண்டுகளுக்கு ரூ.1310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பழங்குடியினர் நலனுக்கு ரூ.1,045 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. வனத் துறைக்கு ரூ.77.7 கோடி, கிராமப்புற மேம்பாட்டுத் துறைக்கு ரூ.58.17 கோடி, ஊராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.4.05 கோடி என மொத்தம் ரூ.265 கோடி வேறு துறைகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இத்திட்டங்கள் முறையாக அமல்படுத்தப் படவில்லை. பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளான நில உரிமைப் பட்டா, குடியிருப்புகள், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முழுமையடையாமல் இருக்கும்போது, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல.
எனவே, பிற துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட ரூ.265 கோடியை திரும்பப் பெற்று பழங்குடியினர் நலனுக்காகச் செலவிடவும் பழங்குடியினர் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், காண்காணிக்கவும் சிறப்புக் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக் கறிஞர் வாதிடுகையில், அரசு ஒதுக்கும் நிதி அந்தந்த துறைகளுக்கே முழுமையாகச் செலவிடப்படுகிறது என்றார். இதையடுத்து மனு தொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.