இருளில் மூழ்கிய சென்னை நகரம்: மின் இணைப்பு துண்டிப்பு

இருளில் மூழ்கிய சென்னை நகரம்: மின் இணைப்பு துண்டிப்பு
Updated on
1 min read

வார்தா புயல் ஏற்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூரிய வெளிச்சமும் இல்லாததால் பகலிலேயே சென்னை நகரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

வார்தா புயல் 12-ம் தேதி பிற்பகல் சென்னையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. கூடவே சாரல் மழையும் பெய்தது. நள்ளிரவு முதல் கன மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், இருள் சூழ்ந்தது. பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.

காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதியில் இருந்த பல மின் இணைப்பு பெட்டிகள் நீரில் மூழ்கின. மின் அதிகாரிகள் அதை உடனடியாக கண்டறிந்து மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பல இடங்களில் மின் மாற்றிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனாலும் மின் விநியோகம் தடைபட்டது.

மேலும் மழை காரணமாக சூரிய வெளிச்சம் இல்லை. இதனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பகலிலேயே இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் உடல் நலமில்லாதவர்கள், முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in