

சென்னை நகரத்தைச் சுத்தப்படுத்தும் முயற்சியாக புயலால் சாய்ந்த மரங்களின் கிளைகள், இலைகள் உள்ளிட்ட பசுமைக் கழிவுகளை விளையாட்டு மைதானங்களில் குவிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி சென்னை முழுவதும் 261 விளையாட்டு மைதானங்களை நிர்வகித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரி இதுகுறித்துப் பேசும்போது, ''தற்போதுள்ள நிலைமையில் பசுமைக் கழிவுகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வது சுத்தப்படுத்தும் பணியைப் பாதிக்கும். அதனால் சாலையோரங்களில் விழுந்த மரங்களைக் கழித்துக் கட்டி அருகில் உள்ள விளையாட்டு மைதானங்களில் குவிக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் சென்னையில் திருவொற்றியூர், பெருங்குடி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய இடங்களில் போதுமான அளவு விளையாட்டு மைதானங்கள் இல்லை. அவற்றுக்கான இடங்களை முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம் இன்னும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் மாதவன், ''சென்னையில் பசுமைக் கழிவுகளைக் குவிக்கப் போதுமான விளையாட்டு மைதானங்கள் இல்லை. 'வார்தா' புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
பேரிடர் நேரங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு பசுமைக் கழிவுகளைக் குவிப்பது என்பது தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கும்'' என்றார்.
மாநகராட்சியின் உழைப்பு
கடந்த சில வருடங்களாக சென்னை மாநகராட்சி தன்னுடைய 520 பூங்காக்களில் ஏராளமான மரங்களை நட்டு வளர்த்தது. புல்வெளிகளை உருவாக்கியது. ஆனால் ஏராளமான பூங்காக்கள் வார்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தி நகர் பனகல் பூங்கா உள்ளிட்ட ஏராளமான பூங்காக்கள் இதில் அடக்கம்.
செவ்வாய்க் கிழமை அன்று சென்னை மாநகராட்சி, திருவொற்றியூரில் புயலால் சாய்ந்த 139 மரங்களையும் மணலியில் 100 மரங்களையும் அப்புறப்படுத்தியுள்ளது. திருவிக நகரில் 153, மாதவரத்தில் 150, தண்டையார்பேட்டையில் 42, ராயபுரத்தில் 268, அம்பத்தூரில் 126, கோடம்பாக்கத்தில் 160, வளசரவாக்கத்தில் 38, அண்ணா நகரில் 55, தேனாம்பேட்டையில் 98, ஆலந்தூரில் 46, அடையாறில் 128, பெருங்குடியில் 18 மற்றும் சோழிங்கநல்லூரில் 10 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணா நகரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் புதன்கிழமை அன்று பேசியபோது, ''அண்ணா நகரில் மட்டும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் புயலால் சாய்ந்திருக்கும். குடியிருப்புகளில் வசிப்பவர்களே அவற்றை அப்புறப்படுத்தி வருகிறோம்'' என்கிறார்.