விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? - அமைச்சர் விளக்கம்

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்துவரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் அறிவுறுத்தல்கள் பெற்று, அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகள், அடையாறு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகள், மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் என்ற கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் உடல் வெப்பம் அளவிடப்படுகிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறைகளை இனி தொடர வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக சீனாவில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தக்க நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் நிலவுவதாக பரப்பப்படும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரிடமிருந்து உள்துறை அமைச்சகத்துக்கும், சுகாதாரம், கல்வித் துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதாரம், கல்வித் துறைகள் சில கேள்விகளை எழுப்பியிருந்தன. தமிழக அரசு அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in