

சென்னை: தமிழகம் போன்ற மாநிலங்களில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நிறுத்த கூடாதுஎன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் அமர்ஜீத் சின்ஹா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கும்போது, சிலமாநிலங்களில் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
‘பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதியை சிறப்பாக பயன்படுத்தி, பயனுள்ள சொத்துகளை உருவாக்கிய தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை’ என்பதுதான் வல்லுநர் குழு உறுப்பினரின் பார்வை. இதை நோக்கித்தான் வல்லுநர் குழு பயணிக்குமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
வளர்ச்சியடைந்த மாநிலங்களை தண்டிக்கும் இந்த அணுகுமுறை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டால், அது தமிழகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகவே அமையும். இந்த திட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 67.86 லட்சம்குடும்பங்களுக்கு, சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 59.58 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தில் உள்ள குறைகளை போக்குவது, வேளாண் பணிகளுக்கும் இந்த திட்டத்தை நீட்டிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரிந்துரைப்பதுதான், வல்லுநர் குழுவின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வளர்ச்சியடைந்த மாநிலங்கள்என்று கூறி தமிழகம் போன்றமாநிலங்களில் இந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்த பரிந்துரைக்க கூடாது. இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.