

சென்னை: தமிழக நெடுஞ்சாலை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
துறை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், கட்டுமான பணி நடந்து வரும் 129 பணிகள், 9 நில எடுப்பு பணிகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் 56பணிகள், கட்டுமானத்துக்கு முந்தைய நிலையில் உள்ள 130 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுக்கும்போது, உரிய திட்டமிடுதல் வேண்டும். திட்டமிடுவதில் புதிய உத்திகளை கடைபிடிக்க வேண்டும். முறையான கள ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இந்திய சாலை காங்கிரஸ் (IRC), நெடுஞ்சாலை துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி வடிவமைப்புகள் இருக்க வேண்டும்.
பணிகளை உரிய காலத்தில் முடித்தால்தான், மக்களுக்கு அதன் பயன் உடனே சென்றடையும். நவீன உத்தியுடன் கட்டுமானம் மேற்கொண்டால், பெரிய பாலப்பணிகளைக்கூட குறுகிய காலத்தில் முடிக்கலாம். வெள்ள நீர்மட்டத்துக்கு ஒரு மீட்டர் மேல் அடித்தளம் அமையும் வகையில் சாலைகளை அமைக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் முறையான வாட்டத்துடன் வடிகால்களை அமைக்க வேண்டும். அதை ஒட்டியுள்ள குடியிருப்புகளை பாதிக்காதபடி, வடிகாலின் மேல் மட்டத்தை அமைக்க வேண்டும். விதிமுறைகளின்படி, முறையான தரக் கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சாலைமட்டம் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
சாலையை அகலப்படுத்துதல், பாலம் கட்டும் பணிகளில் உரியபணியிட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆய்வின்போது இவற்றை தலைமை பொறியாளர்கள் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.