தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் விற்பனையாகாத 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு: அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் விற்பனையாகாத 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு: அமைச்சர் முத்துசாமி தகவல்
Updated on
1 min read

ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்,பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி வாரியத்தால் கடனுக்கு விற்பனை செய்த வீடுகளுக்கான, ரூ.53 கோடி வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

61 இடங்களில் உள்ள அரசுஊழியர்கள் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. அவற்றை இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்டித் தரப்படும். அதேபோல், 11 இடங்களில் வீட்டுவசதி வாரியத்தில் வீடுகளை வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள், தங்களது வீடுகள் பழுதடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு வீடுகளை வாங்கியோர், புதிதாக வீடுகளை கட்ட கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு தேவையான உதவியைச் செய்ய தயாராக உள்ளோம். குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை ஏற்று, சென்னை கோயம்பேடு பகுதியில் வாரியத்தால் கட்டப்பட்ட 180 வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள், 90 ஆண்டுகள் வரை, எந்தவித சேதமுமின்றி இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.

100 ஆண்டு உறுதித் தன்மை: அதேபோன்று, வீட்டு வசதி வாரித்தாலும் கட்டப்படும் வீடுகள் 90 முதல் 100 ஆண்டுகள் வரை உறுதித் தன்மையுடன் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in