

பணப்புழக்கம் வரும் வரை சுங்கக் கட்டணத்தை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை வசூலிக்கக் கூடாது என்று தமாகா வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 24 நாட்களாக நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு, சில்லறைத் தட்டுப்பாடு போன்றவற்றால் பொதுமக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் முறையான திட்டமிடல் இல்லை. நாளொன்றுக்கு புதிய புதிய அறிவிப்புகள், மக்கள் மத்தியில் குழப்பங்கள், நேரம் வீணாகிறது, தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, வேலை நேரம் பாதிக்கப்படுகிறது.
சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் - பொதுத் துறை வங்கிகளில் இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை, புழக்கத்திற்கும் வரவில்லை. முக்கியமாக சில்லறைத் தட்டுப்பாடில்லாமல், பணப்புழக்கம் வரும் வரை சுங்கக் கட்டணத்தை குறைந்த பட்சம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை வசூலிக்கக் கூடாது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அப்பொழுது தான் வாகனம் செலுத்துபவர்களுக்கும், சுங்கக் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இடையே சண்டை, சச்சரவுகள், நீண்ட வரிசையில் காத்திருத்தல் போன்ற தேவையற்ற பிரச்சனைகள் எழாது'' என்று வாசன் கூறியுள்ளார்.