Published : 29 Nov 2022 06:56 AM
Last Updated : 29 Nov 2022 06:56 AM

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொறியாளருக்கு வெற்றிகரமாக இதய மாற்று சிகிச்சை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்த பொறியாளருடன் மருத்துவக் குழுவினர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் குமார் (50). துபாயில் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்காக, அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. அதன் பின்னரும் நெஞ்சு வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார்.

துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் அதிகப்படியான அடைப்புகள் இருந்ததும், இதயம் மிகவும்பலவீனமடைந்திருந்ததும் தெரியவந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை டீன் தேரணிராஜன் அறிவுறுத்தலின்படி அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். முன்னதாக, தமிழக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தில் அவருக்கு இதயம் வேண்டி பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்தனர். அவரது இதயத்தை குமாருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, மருத்துவமனையின் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் ப.மாரியப்பன் தலைமையில் மயக்க மருத்துவர் கணேஷ்,இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மனோகர், மருத்துவர்கள் அஜய்,சிவன்ராஜ், செவிலியர்கள் ஜமுனா,இதய செயல்பாட்டு கருவி ஆபரேட்டர் சுமதி, இசிஜி டெக்னீசியன் அஞ்சலி ஆகியோர் கொண்ட குழுவினர் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயத்தை குமாருக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர்.

இரு வாரங்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தஅவர் பூரணமாக குணமடைந்துள்ளார். இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். இது தொடர்பாக மருத்துவமனை டீன் தேரணிராஜன், இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் ப.மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது:

இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குமார் நலமுடன் உள்ளார். அவருக்கு இதயம் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்படவில்லை. அதனால், எந்த சிக்கலும் இல்லை.அவர் தமிழகத்தில் இருந்தாலும், துபாய் சென்றாலும் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு செய்யப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் ரூ.1 கோடி வரைசெலவாகும். இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையில் இதுவரை 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்னர் நடந்த முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை இதுவாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x