

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே 3 மாதமாக அடிக் கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கலந்து தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி 54-வது வார்டுக் குட்பட்ட கூடலழகர் பெருமாள் கோயில் அக்ரஹாரம் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. அதனால் காஜிமார் தெருவில் குப்பு பிள்ளை தோப்பு, ஹீரா நகர், பவர் ஹவுஸ் ரோடு, பெருமாள் கோயில், தென்மாட வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 மாதத்துக்கும் மேலாக அடிக்கடி கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாடகைக்கு வசித்தோர் வீடுகளை காலி செய்துவிட்டு வேறிடங்களுக்கு சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் பல இடங்களில் வீடு வாடகைக்கு என போர்டுகளை தொங்க விட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இப்பகுதியை பார்வையிட்டு கழிவுநீர் தேங்குவதை தடுக்க தனிக்கவனம் செலுத்தி திட்டம் உருவாக்கி நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுவரை இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகராட்சி ஆணையர், மேயர் இப்பகுதியை பார்வையிட்டு கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பாதாள சாக் கடை கழிவுநீர் குழாய், குடிநீர் குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. அதனால், தற்போதுள்ள அதிகாரிகளுக்கு இப்பகுதி கழிவுநீர் கட்டமைப்பு சரிவரத் தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்கிடம் கேட்டபோது, ‘‘கழிவுநீர் தேங்குவதை தடுக்க தனித்திட்டம் தயாரித்துள்ளோம். விரைவில் தீர்வு காணப்படும்,’’ என்றார்.