Published : 29 Dec 2016 08:55 AM
Last Updated : 29 Dec 2016 08:55 AM

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வு; முதல்வர் யார் என்ற பிரச்சினை கட்சிக்குள் இல்லை: அமைப்பு செயலாளர் பொன்னையன் விளக்கம்

‘முதல்வர் யார் என்ற பிரச்சினை அதிமுகவில் எழவில்லை. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான கூட்டமே இன்று நடைபெறுகிறது’ என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. பொதுக்குழு ஏற்பாடு களை பார்வையிட, வானகரம் வாரு மண்டபத்துக்கு அக்கட்சி யின் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டே இந்த பொதுக்குழு கூடுகிறது. ஜெயல லிதா இறப்புக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவி நிரப்பப்பட வேண்டியுள்ளது. அது, பொதுக் குழுவின் அங்கமாக இடம்பெறும். பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் மனுக்கள் தரவில்லை.

நிரந்தர பொதுச்செயலர் இல்லை

கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பொறுப்பு, பொதுக்குழு, செயற்குழுவுக்கு உள்ளது. அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு தேர்வு செய்யும். பொதுச் செயலாளராக நிற்க வேண்டும் என சசிகலாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி அதிமுகவின் சட்ட விதிகளில் இல்லை. ஜெயலலிதாவை பாசத்தின் அடிப்படையில் அவ்வாறு அழைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக்காரர்கள் யாரும் பிரச்சினையில் ஈடுபடவில்லை. உங்கள் வீட்டுக்கு ஆகாதவர் வீட்டுக்குள் நுழைந்து பிரச்சினை உருவாக்கினால், அதை ஒட்டிய தொடர் நிகழ்வுகள் என்ன நடக்குமோ அது போன்ற இயற்கையான நிகழ்வு நடந்துள்ளது. அதிமுக வன்முறையை ஊக்குவிக்கும் இயக்கமல்ல.

பொய்ச்செய்தி

ஜெயலலிதா இறப்பு குறித்த சந்தேகங்கள், ஆதாரமற்ற, அடிப்படையில்லாத அதிமுகவின் கட்டுக்கோப்பை குலைக்க வெளியிடும் பொய்ச்செய்தி. அவருக்கு முதலில் இருந்து நுரையீரல் மற்றும் இருதய தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இருதய ரத்த குழாய்கள் சுருங்கி விரியாததால் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டது. சர்க்கரை நோயால் இது ஏற்பட்டது.

ஜெயலலிதா பதவியிழந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத்தானே முதல்வராக்கினார். அப்போது இருந்தவர்களில் தகுதியானவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால்தான் அவரை முதல்வராக்கினார்.

இன்று அவர் முதல்வர், இவர் முதல்வர் என்ற பிரச்சினை கட்சிக்குள் எழவில்லை. நாளை பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு தான் நடக்கிறது என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x