

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுஉச்சிமேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஓராசிரியர் பள்ளியான இதில், 35 மாணவ,மாணவியர் பயில்கின்றனர்.
இந்த பள்ளிக் கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து கட்டிடம் இடிக்கப்பட்டு, அதே ஊரில் உள்ள கோயில் நிலத்தில் உள்ள கொட்டகையில் பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது. அங்கு மின்சார வசதி இல்லை. நிரந்தர ஆசிரியரும் இல்லாததால், அருகில் உள்ள பள்ளியில் இருந்து அவ்வப்போது ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தற்காலிக கொட்டகை மழையில் ஒழுகுவதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமாரை சந்தித்து, தங்கள் நிலைக் குறித்து எடுத்துக் கூறினர். அதைக் கேட்டுக் கொண்ட ஆட்சியர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரை வரவழைத்து, விசாரணை நடத்தினார்,
ஒரு மாதத்திற்குள் பள்ளிக்கு கட்டிடம் கொண்டு வரப்படும் அதுவரை பாதுகாப்பான கட்டிடத்தில் மாணவர்கள் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். கள்ளக்குறிச்சி ஆட்சியரை சந்தித்து, தங்கள் நிலை குறித்து எடுத்துக் கூறினர்.