

இளம்வயது திருமணத்தை ஏற்காததால் 16 வயது சிறுமியைக் கொன்று எரித்த வழக்கில் தந்தை மற்றும் அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆ.வாழ வந்தியைச் சேர்ந்தவர் தங்கராஜ். அவரது மனைவி ராஜம்மாள். ஆ.வாழவந்தி ஊராட்சி முன்னாள் தலைவர். இவர்களது 16 வயது மகள் கடந்த 17-ம் தேதி மர்மமான முறை யில் இறந்துள்ளார். அதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்காமல் அவரது பிரேதத்தை அங்குள்ள மயானத்தில் பெற்றோர் எரித்துள்ளனர்.
அதுதொடர்பாக எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணின் பெற்றோர்களான தங்கராஜ், அவரது மனைவி ராஜம்மாள், மகன் சுபாஷ் சந்துரு (19) ஆகிய மூவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:
தங்கராஜ் குடும்பத்தினர் அவர்களது 16 வயது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டருகே உள்ள விவசாய தோட்டத்தில் சிறுமி துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற அண்ணன் சுபாஷ்சந்துரு, தங்கையிடம் திருமணம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார். அதில் அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து அவரை கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார்.
ஆனால், மகள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக பெற்றோர் நாடகமாடியுள்ளனர். பின், பிரேதத்தையும் உடனடியாக எரித்துள்ளனர். இதையடுத்து சுபாஷ்சந்துரு, அவரது தந்தை தங்கராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரேதம் எரிக்கப்பட்ட மயானத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, சில தடயங்களை கைப்பற்றியுள்ளனர். இளம் வயது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.