Published : 29 Nov 2022 04:23 AM
Last Updated : 29 Nov 2022 04:23 AM

2 லட்சம் பேர்... ரூ.1.50 கோடிக்கு புத்தகங்கள்... - நாளை முடிவடையும் சேலம் புத்தகக் காட்சியை நீட்டிக்கக் கோரிக்கை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில், நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புத்தக அரங்குகளை பார்வையிட்டு, பிடித்த புத்தகங்களை வாங்கிச் செல்வதற்கு ஆர்வமுடன் திரண்டிருந்த மாணவ, மாணவிகள். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: சேலம் புத்தகத் திருவிழாவினை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாளையுடன் (30-ம் தேதி) முடிவடைய உள்ள புத்தகத் திருவிழாவை, மேலும் சில நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று புத்தக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து சேலத்தில் மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றன. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சித் திடலில், சேலம் புத்தகத் திருவிழாவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார். புத்தகத் திருவிழா நாளை (30-ம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில், புத்தகத் திருவிழாவைக் காண்பதற்கும், விரும்பிய புத்தகங்களை வாங்கிச் செல்லவும் தினமும் பல ஆயிரம் பேர் திரண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தினமும் புத்தகத் திருவிழாவிற்கு வருவதால், அரங்குகள் யாவும் நிறைந்து காணப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் திருக்குறள், ஆங்கில அகராதி, பொது அறிவு, அப்துல் கலாம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நூல்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தக ஆர்வலர்கள், ஒவ்வொரு அரங்கிலும் தங்களுக்கு பிடித்தமான தலைப்புகள் கொண்ட புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகின்றனர்.

இதனிடையே, சேலம் புத்தகத் திருவிழாவை, இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதுடன், இதுவரை சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578-க்கு விற்பனையாகியுள்ளன. இந்நிலையில், சேலம் புத்தகத் திருவிழாவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று புத்தக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: சென்னையில் மட்டுமே ஆண்டுதோறும் நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா, தற்போது சேலத்திலும் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, சென்னையில் நடத்தப்படுவது போல, எண்ணற்ற புத்தக அரங்குகள், மழை, வெயில் பாதிக்காத அரங்க வடிவமைப்பு, வாகன நிறுத்துமிடம், உணவு அரங்குகள், எளிதில் வந்து செல்லக்கூடிய இடமாக, பேருந்து நிலைய திடல், எல்லாவற்றுக்கும் மேலாக, தினமும் பல்துறை அறிஞர்களின் கருத்துரைகள் என சேலம் மாவட்ட மக்களை மட்டுமல்ல, அண்டை மாவட்ட மக்களையும் புத்தகத் திருவிழாவுக்கு ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் பிரம்மாண்டாக செய்யப்பட்டுள்ளன.

தற்போது சேலத்து மக்களின் மிகவும் பயனுள்ள பொழுதுபோக்காக, புத்தகத் திருவிழா இருக்கிறது. புத்தகத் திருவிழாவை மேலும் சில நாட்கள் கண்டு களித்து, பிடித்தமான புத்தங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே, மேலும் சில நாட்களுக்கு சேலம் புத்தகத் திருவிழாவை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றனர். புத்தக அரங்குகள், வாகன நிறுத்துமிடம், உணவு அரங்குகள், எளிதில் வந்து செல்லக்கூடிய வசதி, அறிஞர்களின் கருத்துரை என சேலம் மாவட்ட மக்களை மட்டுமல்ல, அண்டை மாவட்ட மக்களையும் புத்தகத் திருவிழாவுக்கு ஈர்க்கும் வகையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x