

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொடிவேரியில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் மதியம் தொடங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கொடிவேரி, சத்தியமங்கலம், பவானிசாகர், கோபி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் பாதிப்பு ஏற்பட்டது. கொடிவேரியில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அங்கு 12 செ.மீ.மழை பதிவான நிலையில், கொடிவேரியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தூக்க நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கன மழை பெய்த நிலையில், கொண்டையன்பாளையம் ஜக்கன்காட்டுப் பள்ளத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அத்தாணி - சத்தியமங்கலம் இடையே நேற்று சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கள்ளிப்பட்டி பகுதியில் நெல் நடவு செய்யப்பட்ட நிலங்களில், மழை நீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலையிலும் சில இடங்களில் மழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட மழையளவு விவரம் (மிமீ): கொடிவேரி 123, குண்டேரிப்பள்ளம் 79, சத்தியமங்கலம் 63, பவானிசாகர் 43, அம்மாப்பேட்டை - 27, கோபி - 13 நம்பியூர் - 6.