Published : 29 Nov 2022 04:15 AM
Last Updated : 29 Nov 2022 04:15 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் மல்லூரில் 8 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ தொழிற்பேட்டையை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என 2013-ல் சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு சிறு தொழில்வளர்ச்சி நிறுவனம் சார்பில் அரியலூர் வட்டம்மல்லூர் கிராமத்தில் 25.74 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலைகள் மற்றும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டது. 2014-ல் பணிகள் முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் இங்கு தொழில் தொடங்கவில்லை.
இதற்கு, ‘‘சிட்கோ தொழிற்பேட்டை குறித்து போதிய விளம்பரம் செய்யப்படவில்லை. அலுவலகம் அமைத்து அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மனைகளின் குத்தகை தொகை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது’’ உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள நிலையில், அரியலூரில் 8 ஆண்டுகளாக முடங்கியுள்ள சிட்கோ தொழிற்பேட்டையை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஆர்.சங்கர் கூறியது: பெரம்பலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட குறைந்த காலத்திலேயே அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, அரியலூரில் 8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், இதற்கான வாடகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT