Published : 29 Nov 2022 05:00 AM
Last Updated : 29 Nov 2022 05:00 AM

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் திரண்டனர்

சிறப்பு முகாமில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

சென்னை: தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைப்புக்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கின. இந்த முகாம்களில் மக்கள் திரண்டு, ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாப்பூரில் உள்ள மின்கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மின் வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களிலும் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம் செலுத்த தனி கவுன்டர்களும், ஆதார் எண் இணைக்க தனி கவுன்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், இலவச மின்சாரம் ரத்தாகி விடும் என்று சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். மின் வாரியத்தை மேம்படுத்தவே, மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

ஒருவர் 5 மின் இணைப்பு வைத்திருந்தாலும், இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், ஒரு ஆதார் எண்ணை 10 மின் இணைப்புகளுடன்கூட இணைத்துக் கொள்ளலாம். இறந்தவர்களின் பெயரில் மின்இணைப்பு இருந்தால், சிறப்பு முகாமில் பெயரை மாற்றிக் கொண்டு, ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களுக்கு சிறப்பு முகாம்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைத்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x