

மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதில் புதுச்சேரி முன்னோடி மாநிலமாக செயல்பட வேண்டும் என்ற மத்திய அரசின் நிர்பந்தத்தை ஏற்பதற்கில்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வியாபாரம் முதலியவை பண அட்டை மூலம் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை முழுமையாக நிறைவேற்ற முடியாது படிப்படியாகதான் நிறைவேற்ற முடியும் இதனால் வரும் எந்த விளைவாக இருந்தாலும் சந்திக்க தயார் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று கூறியதாவது:
புதுச்சேரியில் வியாபாரம் முதலியவை பண அட்டை மூலம் இயங்க வேண்டும், பொது மக்களும் மின்னணு பணப் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என புதுச்சேரி மாநில தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விடியோ கான்பரன்சிங்கில் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு பணப்புழக்கம் புதுச்சேரியில் மிகவும் குறைந்துள்ளது. வியாபாரம் சரிந்துள்ளது. சிறு வியாபாரிக்ள பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகள், ஏடிஎம் மையங்களில் புதிய 500 மற்றும் 100 நோட்டுகள் இல்லாததால் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுக்கமாமல் காசோலையாக நிர்வாகம் கொடுப்பதாகவும் அதை மாற்ற முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்கு வருவாய்துறை மூலமாக வரவேண்டிய வருமானம் குறிப்பாக விற்பனை வரி மற்றும் கலால் வரி குறைந்துள்ளது. இதனால் நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்நியைில் பண அட்டை மூலம் தொழில் செய்ய வேண்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அது முடியாத காரியம். மத்திய அரசு மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை செயல்படுத்த புதுச்சேரி முன்னோடி மாநிலமாக செயல்பட வேண்டும் என உத்தரவி்ட்டுள்ளது.
புதுச்சேரியில் இதற்கான எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை. இதுகுறித்து அமைச்சர்களுடன் கலந்து பேசி, பண அட்டை மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை முழுமையாக நிறைவேற்ற முடியாது.
படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும் என முடிவெடுத்துள்ளோம், புதுச்சேரியில் கிராமப்பகுதியில் வங்கிகள் ஏடிஎம்கள் இல்லை. பெரும்பாலான கடைகளில் பண அட்டை பயன்படுத்தும் ஸ்வைப் இயந்திரம் இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
இப்பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசினேன். புதுச்சேரி மாநிலத்தில் நீங்கள் சொல்லும் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது. எங்களுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டேன்.
மத்திய அரசு தனது திட்டங்களை புதுவையில் திணிக்க முயன்றால் அதை ஏற்க மாட்டோம். குறிப்பாக மக்களுக்கு எது ஏற்றதோ அதை தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு தேவையான கட்டமைப்பு, கூடுதல் வங்கிகள், ஏடிஎம் மையங்களை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். சிறு வியாபாரிகள் மற்றும் யாரிடமும் இல்லை. எனவே இதை மக்கள் மத்தியில் யாரும் திணிக்க முடியாது என்று கூறியுள்ளேன்.
இப்பிரச்னை தொடர்பாக பிரதமரை வரும் 23-ம் தேதி நேரில் சந்தித்து பேச உள்ளேன். மக்கள் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களைத்தான் புதுச்சேரி அரசும் ஏற்றுக்கொள்ளும். இதனால் வரும் எந்த விளைவாக இருந்தாலும் சந்திக்க தயார் என்றார் நாராயணசாமி.