

சென்னைக்கான 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதி அனு மதியை விரைவில் அளிக்கவேண் டும் என ஜப்பான் பன்னாட்டு முகமை தலைவரிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் (ஜிகா) தலைவர் ஷினிசி கிடோகா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்தனர். நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த ஜிகா குழுவினரை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார்.
தொடர்ந்து, முதல்வரை சந்தித்த ‘ஜிகா’ தலைவர் ஷினிசி கிடோகா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவுக்கு இரங்கலையும், சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய ‘வார்தா’ புயல் தொடர்பாக தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.
அதன்பின், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘ஜிகா’ குழுவினரிடையே பேசியதாவது:
‘ஜிகா’ வின் உதவியில் உருவான மெட்ரோ ரயில் திட்டத்தின், விமான நிலையம் - சின்னமலை வரையிலான போக்குவரத்து தொடக்க விழாவில்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதியாக பங்கேற்றார். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், பெரிய கட்டமைப்பு திட்டங்கள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள் ‘ஜிகா’ நிதியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 500க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற கட்ட மைப்பு திட்டம், ஒகேனக்கல் குடிநீர் விநியோக திட்டம், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம், தமிழ்நாடு தொடரமைப்பு மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் -1, தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உதவி வருவதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மத்திய வணிகம் மற் றும் தொழில்துறையால் செயல் படுத்தப்படும், சென்னை- பெங் களூரு தொழில் பெருவழித்திட்டத் துக்கும் ஜிகா நிதியுதவி அளித்துள் ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது. மேலும், சென்னை குழந்தைகள் சிகிச்சை மையத்தில், புறநோயாளிகள் பிரிவு ரூ.88 கோடியில் ‘ஜிகா’ நிதியுதவியுடன் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சென்னைக்கான 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் தி்ட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் பாகம், தமிழ்நாடு முதலீடு மேம்பாட்டு திட்டம் 2-ம் பாகம், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புடன் கூடிய சென்னை வெளிவட்டச் சாலை திட்டம், சென்னை நகர்ப்புற கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங் களை நிறைவேற்ற தேவையான அனுமதியை வழங்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்துக்கு தேவை யான உதவிகளை ‘ஜிகா’ அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திப்பின் போது ‘ஜிகா’ தலைவர் ஷினிசி கிடோகா தெற்காசிய பிரிவின் இயக்குநர் ஜெனரல் அராய் தோரு, ‘ஜிகா’ இந்திய அலுவலக தலைவர் ஹிரோகோ தனிகுச்சி, தூதர் இமோடோ சச்சிகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில், அமைச்சர் கள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.