Published : 22 Jul 2014 12:00 AM
Last Updated : 22 Jul 2014 12:00 AM

தமிழகத்தில் மின்வெட்டு, கட்டண உயர்வுக்கு யார் காரணம்?- பேரவையில் அமைச்சருடன் திமுக வாக்குவாதம்

மின்வெட்டு, கட்டண உயர்வுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமிக்கும், மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை மின் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:

ஐ.பெரியசாமி (திமுக): 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு தரப்பட்டது.

அமைச்சர் விசுவநாதன்: இந்த திட்டம் எப்படி சாத்தியம் என்று நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே கேட்டோம். இணைப்பு கொடுக்கும்போது விண்ணப்பத்தை வாங்கினீர்கள். செயல்படுத்தாத திட்டத்தை உறுப்பினர் சாதனையாக சொல்ல வேண்டாம்.

பெரியசாமி: திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு அறிவிக்கவில்லை.

அமைச்சர் விசுவநாதன்: மின் வாரியத்தின் இழப்பை ஈடுகட்ட அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியிருக்கிறீர்கள். நிதிநிலையை சீரழித்து விட்டீர்கள். அப்போதே 25 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்காது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் தன்னிச்சையாக உயர்த்த நேரிடும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சொன்னதால் வேறு வழியில்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

பெரியசாமி: கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து மின்வெட்டு இல்லை என்று முதல்வர் அறிவித்தார். இருந்தாலும் கடந்த மாதம் 26, 27, 28 தேதிகளில் நகரங்களில் அரை மணி நேரமும், கிராமப்புறங்களில் 2 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு இருந்தது.

அமைச்சர் விசுவநாதன்: கூடங்குளம் அணுமின் நிலையம், மேட்டூர், வடசென்னை அனல் மின்நிலையங்களில் ஒரேநேரத்தில் பழுது ஏற்பட்டதால் 26, 27, 28 ஆகிய தேதிகளில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மின்தடைதான் ஏற்பட்டது.

பேரவைத் தலைவர் தனபால்: (பெரியசாமியைப் பார்த்து) 38 நிமிடம் பேசிவிட்டீர்கள். பேச்சை முடியுங்கள்.

அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று, பெரியசாமியை பேச அனுமதிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.

பேரவைத் தலைவர்: இதற்கு மேல் பேச அனுமதிக்க முடியாது. உங்களுக்காக மட்டும் அவை நடத்தவில்லை. அவை நடத்தவிடாமல் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்.

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர் அண்ணாதுரையை பேச அழைத்தார். அதன் பிறகும் திமுக உறுப்பினர்கள் நின்றபடி குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கிட்டு): திமுக உறுப்பினர் தனது பேச்சை முடிக்க ஒரு நிமிடம் கொடுக்கலாம்.

பெரியசாமி: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களைத்தான் அதிமுக ஆட்சியில் முடித்திருக்கிறீர்கள்.

அமைச்சர் விசுவநாதன்: தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்துக்கு 19-6-2003 அன்றும், வடசென்னை அனல் மின் நிலையத்துக்கு 12-12-2005 அன்றும், குந்தா நீரேற்று நிலையத்தில் புனல் மின்நிலையம் அமைக்கவும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு அனல் மின்நிலையம் அமைப்ப தற்கு ஏராளமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற நடைமுறை களுக்காக இரண்டரை ஆண்டுகள் வரை ஆகும். அதிமுக ஆட்சிக் காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளாமல், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் கிடப்பில் போட்டது. அந்த திட்டங்களை இறுதிவரை மேற்கொள்ளவே இல்லை. மேற்கண்ட திட்டங்களைத் தொடங்கிய முதல்வரே, செயல் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐ.பெரியசாமி தொடர்ந்து பேச முயன்றார்.

பேரவைத் தலைவர்: முதல்வர் சொன்னதால் கூடுதலாக ஒரு நிமிடம்பேச அனுமதித்தேன். இதற்கு மேலும் அனுமதி தர முடியாது.

இதையடுத்து திமுக உறுப்பினர் கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக வேறொரு பிரச்சினைக்காகவும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x