Published : 26 Jul 2014 02:49 PM
Last Updated : 26 Jul 2014 02:49 PM

2 லட்சம் மீனவ பெண்களுக்கு அடையாள அட்டை: அமைச்சர் ஜெயபால் அறிவிப்பு

சட்டப்பேரவையில் கால்நடை பரா மரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடந்தது. உறுப்பினர் களின் விவாதத்துக்கு மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் பதில் அளித் துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

மீன்பிடி சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் 1.90 லட்சம் பெண் களை அடையாளம் காணவும், குடி யிருப்பு நிலையை அறியவும், தொழில் பாது காப்பு வழங்கவும் அவர்களுக்கு உயிரி தொழில்நுட்ப (பயோ-மெட்ரிக்) அடையாள அட்டை வழங்கப்படும்.

* எண்ணூர், கடலூர் மாவட்டம் முதுநகர், நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக, ரூ.4 கோடியில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* கிராமங்களில் வாழும் பெண்கள், வண்ண மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் ரூ.2.13 கோடியில் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை மையங்கள் அமைக்கப்படும்.

* மீன் உற்பத்தி திறனை அதிகரிக்க காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் குளங்களில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

* மீனவ கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்களுக்கு தலா 20 கிலோ நைலான் மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு 50 சதவீத மானியமும், 50 சதவீத பயனாளிகளுக்கு இழு வலைகள் வாங்க 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

* குறுகிய காலத்தில் வேகமாக வளரும் பண்ணை திலேப்பியா மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்த இடுபொருள் செலவில் 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.

* வெளிநாடுகளில் நவீன மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

* ஈரோடு பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் ரூ.60 லட்சத்தில் அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளுடன் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்.

* தரமான மீன்களை நியாயமான விலையில் விற்க சென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் ரூ.80 லட்சத்தில் 8 நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

* சென்னையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ.50 லட்சத்தில் 5 நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் ரூ.1.84 கோடி செலவில் கடல் மீன் குஞ்சு பொறிப்பகம் அமைக் கப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில், நோய் தாக்காத தரமான நாட்டு இன இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்ய ரூ.1.98 கோடியில் நாட்டு இனத் தாய் இறால் வங்கி நிறுவப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் ஜெயபால் வெளியிட்டார்.

முதல்வர் எழுதிய 48 கடிதங்கள்

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா பேசினார். அப்போது அவர் கூறும்போது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் பதில் அளித்துப் பேசுகையில், “தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 37 மாதங்களில் பிரதமருக்கு 48 கடிதங்கள் எழுதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 14 கடிதங்களே பிரதமருக்கு எழுதப்பட்டன” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x