

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ என்பது முக்கிய தருணம். இத்தருணத்துக்குள் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுவதில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
தமிழகத்தில் 855 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் உள்ளன. இவற்றில் பச்சிளம் குழந்தைகளுக்காக 65 மற்றும் மழை வெள்ளத்திலும் செல்லக்கூடிய 78 நான்கு சக்கர இயக்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிறிய தெருக்களிலும் செல்லும் வகையில் 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் சேவையில் உள்ளன. இந்த சேவையை பயன்படுத்தும் விதமாக 24 மணி நேரமும் தொலைபேசியி்ல் தொடர்பு கொள்ள ஏதுவாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.