

சட்டப்பேரவை குழுக்களை அமைக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்த ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் அறையில் திமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் எப்போது நியமிக்கப்படுவார் என திமுக எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனை நேரில் சந்தித்து கேட்டனர். விரைவில் நியமிக்கப்படுவார் என அவர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு நியமிக்கப்பட்ட உதவியாளரை அதிமுக அரசு நீக்கியது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தீர்ப்பு வந்து ஒரு மாதமாகியும் உதவியாளர் நியமிக்கப்படவில்லை. இது குறித்து கேட்பதற்காக தலைமைச் செயலகம் வந்தோம்.
திமுக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, கு.க.செல்வம் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து கேட்டபோது, விரைவில் உதவியாளர் நியமிக்கப்படுவார் என உறுதி அளித்துள்ளார்.
அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்காக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த மே மாதம் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை சட்டப்பேரவை குழுக்கள் அமைக்கப்பட வில்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனாலும், இதுவரை முறையான பதில் வரவில்லை. சட்டப்பேரவை குழுக்கள் அமைக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.
வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் வழங்கினோம். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
இதுவரை 35-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ, நிவாரணம் வழங்கவோ தமிழக அரசு முன்வரவில்லை. இதுகுறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை அவரது தோழி சசிகலாவுக்கும் எந்த வகையில் அளிக்க முடியும் என்றுதான் கேள்வி எழுப்பியிருந்தேன். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது என எப்போதும் சொல்லவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.