காணாமல்போன ‘அறிவின் ஆலமரம்’ - மதுரையில் மீண்டும் அமையுமா அறிவியல் மையம்?

காணாமல்போன ‘அறிவின் ஆலமரம்’ - மதுரையில் மீண்டும் அமையுமா அறிவியல் மையம்?

Published on

மதுரையைப் பார்த்து அமைக்கப்பட்ட நெல்லை அறிவியல் மையம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குத் தூண்டுகோலாக இருந்த மதுரை அறிவியல் மையம் அழிந்து போய்விட்டது.

ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (1978) மதுரையில் மத்திய அரசு நிதி உதவியுடன் அறிவியல் மையம் அமைக்கப்பட்டது. அழகர்கோவில் சாலையில் தற்போது பல்கலைக்கழக கல்லூரி நடைபெறும் கட்டிடத்தில் செயல் பட்ட இந்த மையத்தில் கோளரங்கம், எளிய அறிவியல் விளக்க மாதிரிகள், தொலைநோக்கி போன்றவை இருந்தன. வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு அறிவியல் ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன.

விரிவடைந்த மையங்கள்

தென்தமிழகத்தின் முன்னோடி யான இந்த அறிவியல் மையத்துக்கு ஆசிரியர்கள் பலர் தங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வந்தனர். இந்த மையத்தால் கவரப்பட்ட நெல்லை மாவட்ட அறிவியல் ஆர்வலர்கள், அரசிடம் வலியுறுத்தி 1987-ல் அங்கும் ஒரு அறிவியல் மையத்தை ஏற்படுத்தினர். இதேபோல 1999-ல் திருச்சியிலும் ஒரு மையம் நிறுவப்பட்டது.

அந்த மையங்கள் எல்லாம் தற்போது, டிஜிட்டல் கோளரங்கம், 3டி தியேட்டர், டயோனசர் பூங்கா, மாயாஜால கண்ணாடி அரங்கம் என்று விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால், இந்த விழுதுகளுக்கு ஆணிவேராகத் திகழ்ந்த மதுரை அறிவியல் மையமோ காணாமல் போய்விட்டது. முடங்கிப்போன இந்த மையத்தை, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு நாகமலையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்துக்கே கொண்டு போனார்கள். அங்கு கோளரங்கத்துக்கு என தனி கட்டிடமும் கட்டப்பட்டது.

அதையொட்டியே சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்க அப்போதைய மக்களவை உறுப்பினர் பொ.மோகன் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கினார். அதைக் கொண்டு பல்வேறு அறிவியல் சாதனங்கள் நிறுவப்பட்டன.

பழுதடைந்த சாதனங்கள்

ஆனால், அதனை முறையாக செயல்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறியது. தற்போது அறிவியல் சாதனங்கள் எல்லாம் பழுதடைந்து, மட்கி வருகின்றன. அறிவை வளர்த்த ஆலமரம் இன்று, பீதியை ஏற்படுத்தும் முள்புதராகிவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மையத்தின் மதுரை மாவட்ட தலைவரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான பி.குமாரசாமியிடம் கேட்டபோது அவர் கூறியது: எளிமையாகச் சொன்னால் அறிவியல் கருத்துகளை பாமரர்கள்கூட புரிந்து கொள்வார்கள். மாணவர்கள் அறிவியல் செய்திகளைப் படித்தால் மறந்துவிடுவார்கள். கண்ணால் கண்டு, தானே அதனை நிகழ்த்தியும் பார்த்தார்கள் என்றால் மறக்கவே மாட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் மதுரையில் அறிவியல் ஆர்வமிக்க இளைஞர்கள் உருவாக இந்த மையம் பேருதவி புரிந்தது. தமிழ்ப் பேராசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்ந்த என் உடன்பிறந்த தம்பி மீனாட்சிசுந்தரம், இன்று இயற்பியல் துறையில் விஞ்ஞானி ஆனதற்கும் இந்த மையமே காரணம். இன்றைய காலகட்டத்தில் மதுரைக்கு நிச்சயம் நவீன அறிவியல் மையம் தேவை. அதைக் கொண்டு வர எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in