

பயணிக்கும் திசையில் சூலூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோமனூர். விசைத்தறி நகரம் என்றழைக்கப்படும் இந்த ஊரின் 5 கிலோமீட்டர் முன்புறமுள்ள ராசிபாளையம், மாதப்பூர் கிராமங்களிலிருந்தே விசைத்தறிகளும், அதற்கு பாவு நூல் விநியோகிக்கும் சைசிங் மில்களும் சப்தமிடத் தொடங்கிவிடுகின்றன.
இந்த சப்தம் சோமனூருக்கு அப்பால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் வரையிலுமே எதிரொலிக்கிறது. இந்த 23 கிலோமீட்டர் தொலைவில் நொய்யலின் இடது, வலது கரையோரங்களில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறிகளும், 200-க்கும் மேற்பட்ட சைசிங் மில்களும் செயல்படுகின்றன.
இவற்றில் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். ஆனால் இந்த தொழிற்கூடங்களில் இருந்து சிறிதும் கழிவுநீர் வெளியேறுவதில்லை.
இங்குள்ள சைசிங் மில்களில் தயாராகும் பாவு நூலுக்கு கஞ்சி தேவை. அதை முக்கி எடுக்க நல்ல தண்ணீர் தேவை. அதற்குகூட 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரை லாரியில் ரூ.1,000 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள் ஆலை உரிமையாளர்கள்.
கஞ்சியில் கிடைக்கும் கழிவுநீரை தொழிற்கூடங்களின் அருகில் உள்ள தென்னந்தோப்பு, வாழைத்தோப்புகளுக்கே விடுகிறார்கள். இவற்றில் நச்சுத் தன்மை இல்லாததால் மரங்கள் நன்கு வளர்கின்றன.
நீர்நிலைகளுக்கு பாதிப்பில்லை
இங்குள்ள விசைத்தறிக்கூடங்கள், சைசிங் மில்களில் இருந்து வெளியாகும் பஞ்சு மாசு காற்றில் கலக்கிறது. அதேசமயம், இங்குள்ள நீர்நிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. ஆனால், இப்பகுதி மக்கள் வெளியேற்றும் சாக்கடைக் கழிவுகள், குப்பை, கோழிப்பண்ணைக் கழிவுகள் நொய்யலை பாழ்படுத்துகின்றன.
சோமனூரை உள்ளடக்கிய கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஓடையின் ஒரு பகுதி ராயர்பாளையம், சுஸ்லான், கருமத்தம்பட்டி புதூர், தண்ணீர்பந்தலைக் கடந்து கிருஷ்ணாபுரம் பள்ளத்தை அடைகிறது. அங்கு ஆத்துப்பாளையம் குட்டையில் நிறைந்து, நொய்யலை அடைகிறது. இதன் பயணம் சுமார் 6 கிலோமீட்டர். இந்த மொத்த பள்ளமும் குப்பை, கழிவுநீரால் நிறைந்துள்ளது.
அடுத்து, கணியூர் ஊராட்சியில் வேட்டைக்காரன் குட்டையிலிருந்து புறப்படும் காட்டாறு ஊஞ்சப்பாளையம், ராமாச்சிபாளையம் குட்டையை நிரப்பி, நொய்யலாற்றில் கலக்கிறது. சுமார் 8 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த ஆறு முழுவதும் கட்டிடம், குப்பை, கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது.
முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியில் முதலிபாளையம் குட்டையிலிருந்து புறப்படும் சிறு, சிறு ஓடைகள் கணியூர் பள்ளங்களை நிறைத்து, முத்துக்கவுண்டனூர் அருகே நொய்யலுக்குச் செல்லுகிறது. இதன் 8 கிலோமீட்டர் தொலைவு பயணத்தில், ஆங்காங்கே கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அரசூரில் மழையின்போது உருவாகும் நீரோடைகள் அங்குள்ள செட்டிக்குட்டையை நிரப்புகின்றன. முன்பு 60 ஏக்கர் இருந்த இந்த குட்டை ஆக்கிரமிப்புகளால் தற்போது 30 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த குட்டை நிரம்பியதும் புறப்படும் ஓடை, அருகம்பாளையம் ஓடை, ராசிபாளையம் ஓடைகளைக் கடந்து நொய்யலுக்குச் செல்கிறது. இதன் பயண தொலைவு 8 கிலோமீட்டர்.
இதற்கு மேற்கேயுள்ள, 200 ஏக்கர் பரப்பு கொண்ட நீலம்பூர் ஆச்சான்குளம், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீராதாரமாக விளங்கியது. தூர் வாரப்படாமல் உள்ள இந்த குளம் நிரம்பினால், தண்ணீர் குளத்துப்பாளையம், கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் என 10 கிலோமீட்டர் பயணித்து நொய்யலில் சங்கமிக்கும். இதேபோல, மாதப்பூர், வடுகன்காளிபாளையம், செம்மாண்டம்பாளையம் பகுதிகளிலும் மழைக் காலங்களில் நீரோடைகள் உருவாகி, நொய்யலை அடைகின்றன.
இதேபோல, காடாம்பாடி, செங்கத்துறை பகுதியிலிருந்தும் மழைக் காலங்களில் ஓடைகள் உருவாகி நொய்யலை அடைந்தன. அவை பெரும்பாலும் மண்மூடியும், கட்டிடக் கழிவு, குப்பை நிரம்பியும் காணப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறியது: 50 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்தது. கிணற்றுப் பாசனத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, ராகி, துவரை, அவரை, தட்டப்பயிர், உளுந்து என சகலமும் விளைந்ததன. பருத்தி விளைச்சல் கொடிகட்டிப் பறந்தது. அரசூர், நீலம்பூர், கணியூர் பகுதிகள் உயர்தர கருங்கண்ணிப் பருத்திக்கு வித்திட்ட கிராமங்களாகவே விளங்கின. இதையொட்டி, சோமனூரில் ஜின்னிங் ஆலைகளும், பஞ்சாலைகளும் உருவாகின.
சு.பழனிசாமி.
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம், விவசாய, வியாபாரப் போட்டியில் சோமனூர் விவசாயிகளும், ஜின்னிங் ஆலை உரிமையாளர்களுமே முக்கியப் பங்கு வகித்தனர்.
கோவை மாநகரின் அசுர வளர்ச்சியும், திருப்பூரில் பனியன், சாய, சலவைப் பட்டறைகளின் பெருக்கமும் சோமனூரை பெரிதும் பாதித்தன. நொய்யல் ஆறு சாக்கடை, சாயக் கழிவுகளால் நிரம்பியதுடன், நிலத்தடி நீர் 1,200 அடிக்குமேல் சென்றுவிட்டது. இங்கு வேளாண்மையில் ஈடுபட்ட மக்கள், மாற்றுத் தொழிலாக விசைத்தறி, கோழிப்பண்ணைகளை தேர்ந்தெடுத்தனர்.
மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்ப கழிவுகள் அதிகரித்தாலும், கோவை, திருப்பூர்போல ஆலைக் கழிவுகள் வரவில்லை என்பது ஆறுதலான விஷயம். எனினும், நாங்கள் எந்த சேதமும் விளைவிக்காமலேயே, எங்களை வாழ்வித்த நொய்யல் கிழக்கிலும், மேற்கிலும் பாழாகி, நோய் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்வதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது என்றார்.
பணமிருப்போருக்கு மனமில்லை
அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் கூறும்போது, “கருமத்தம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள முத்துக்கவுண்டனூர், மாதப்பூர், ராசிபாளையம், சியாமளாபுரம், நீலம்பூர், அரசூர், கணியூர் போன்ற ஊராட்சிகளில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், சைசிங், ஜின்னிங், பஞ்சாலை, நூற்பாலை, இன்ஜினீயரிங் தொழிலதிபர்கள் நிறைந்துள்ளார்கள். தனியார் கல்லூரிகள், பள்ளிகள் நடத்துவோர், பெரும் நில உரிமையாளர்களும் அதிகமுள்ளனர். இவர்கள் மனது வைத்தால், சொந்த செலவிலேயே நொய்யலை சுத்தப்படுத்தலாம்.
நொய்யல் ஆற்றங்கரையோரம் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரங்களை நடலாம். சாக்கடையில் குப்பை கொட்டும் மக்களிடம், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். தெருவெங்கும் குப்பைத் தொட்டி வைக்கவும் உதவலாம். ஆனால், இதற்கு யாருமே முன்வருவதில்லை.
ஒருமுறை 1,000 மரக்கன்றுகளை நடுவதற்காக சில தொழிலதிபர்களை அணுகினோம். பயனில்லை. கடைசியில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கொடுத்த மரக்கன்றுகளை, கருமத்தம்பட்டி முதல் சோமனூர் வரை சாலையோரம் நட்டுவைத்தோம். அதையும் பராமரிக்க யாரும் முன்வரவில்லை. மிகுந்த நெருக்கடி கொடுத்த பின்னரே, சிலர் அவற்றைப் பராமரிக்க முன்வந்தனர்.
சில நாட்கள் மட்டும் தண்ணீர் ஊற்றிய நிலையில், அதற்குப் பிறகு கண்டுகொள்ளவேயில்லை என்றார்.
பேரூராட்சி அலுவலர்கள் கூறும்போது, “எங்களிடம் போதுமான அளவுக்கு ஊழியர்களும், வாகனங்களும் இல்லை. மேலும், குப்பையை தொட்டியில்தான் கொட்ட வேண்டுமென்ற விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை. நகரில் குப்பைத் தொட்டிகளை வைப்பதற்குக்கூட மக்கள் இடையூறு செய்கின்றனர். இதையெல்லாம் சமாளித்துதான் பணியாற்ற வேண்டியுள்ளது” என்றனர்.