Last Updated : 28 Nov, 2022 10:41 PM

 

Published : 28 Nov 2022 10:41 PM
Last Updated : 28 Nov 2022 10:41 PM

ஊராட்சிக்கு சொந்தமான 3.78 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: 8 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

மதுரை: சங்கரன்கோவில் கே.ஆலங்குளம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து 8 வாரத்தில் மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கே.ஆலங்குளம் ஊராட்சித் தலைவர் க.ஜெயவள்ளி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. கே.ஆலங்குளம் கிராமத்தில் சர்வே எண்: 67-1ல் உள்ள 3 ஏக்கர் 78 சென்ட் இடம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. அந்த இடம் நிலம் சீர்திருத்த சட்டப்படி 1976-ல் கருப்பசாமி என்பவருக்கு வழங்கப்பட்டது. 2008-ல் கருப்பசாமி அந்த இடத்தை பொது மக்கள் நலனுக்காக ஊராட்சிக்கு தானமாக வழங்கினார். அந்த இடம் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த இடத்துக்குள் மாரியப்பன், கனகராஜ், மனோகரன், கணேசன், கடற்கரை ஆகியோர் தகர செட் அமைத்து ஆக்கிரமித்தனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கேட்ட என்னை மிரட்டினர். இது தொடர்பாக குருவிக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீஸார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.

கே.ஆலங்குளம் ஊராட்சித் தலைவராக என் கணவர் இருந்த போது இந்த இடம் தொடர்பாக சங்கரன்கோவில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஊராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் வைத்துள்ளனர். அந்த இடத்தில் கே.ஆலங்குளம் மக்களுக்காக சமுதாயக்கூடம், திருமண மண்டபம், நூலகம், பூங்கா, விளையாட் மைதானம் கட்ட முடிவு செய்துள்ளோம். எனவே, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு பொதுப் பயன்பாட்டுக்காக ஊராட்சி இடத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாஸ்கர்மதுரம் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், தென்காசி ஆட்சியர் மனுதாரரின் மனுவை கீழமை நீதிமன்றம் 2014-ல் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் 8 வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x