Last Updated : 28 Nov, 2022 04:13 PM

 

Published : 28 Nov 2022 04:13 PM
Last Updated : 28 Nov 2022 04:13 PM

புதுச்சேரியில் கல்வீடு திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு மானிய உதவி நிறுத்தம்: திமுக குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் சிவா | கோப்புப் படம்

புதுச்சேரி: கடந்த ஓராண்டாக கல்வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு புதுச்சேரியில் மானிய உதவி வழங்கப்படவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தை குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்றவும், சொந்த வீடற்றவர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் நாட்டிலேயே முதல் முறையாக காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதன்முதலில் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.40,000 மானியம் வழங்கப்பட்டது.

இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலை மாறி தீ விபத்து குறைந்து. தற்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது. தற்போது மானிய உதவியும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், "கல்வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.1.5 லட்சம் மட்டுமே வழங்கி வரும் நிலையில், மாநில அரசு ரூ.2 லட்சமாக மத்திய அரசைவிட கூடுதலாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விண்ணப்பித்து நிதியுதவி கேட்டு வருபவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுவரை நிதியுதவி பெறாமல் மிகவும் பழமையான வீடுகளில் வசிப்பவர்கள் இத்திட்டத்தில் நிதியதவி கேட்டால், வீட்டை இடித்தால்தான் நிதியுதவி தரப்படும் என்கின்றனர். அதை நம்பி இடித்தவர்களும் நிதியுதவி கிடைக்க காலதாமதம் ஆவதால், வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை செலுத்தி அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஓராண்டாக இத்திட்டத்தில் நிதியுதவி வழங்காததால், விண்ணப்பித்துள்ள மக்கள் திட்டத்திற்கு காமராஜர் பெயரை மாற்றியதுதான் ராசியில்லையோ என்றும் புலம்பி வருகின்றனர். எனவே, கல்வீடு கட்டும் திட்டத்திற்கு உடனடியாக மீண்டும் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் என்ற பெயரை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக முதல் தவணைத் தொகையை கொடுத்து பயனாளிகள் வீடுகட்டும் பணியை தொடங்கச் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x