Published : 23 Dec 2016 11:00 AM
Last Updated : 23 Dec 2016 11:00 AM

திறந்தவெளி மலம் கழித்தலைத் தடுக்க விசில் அடித்து விழிப்புணர்வூட்டும் குட்டி கமாண்டோ படை: தனிநபர் இல்லக் கழிப்பிடப் பணி கோவையில் தீவிரம்

திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக கோவையை மாற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்ட குட்டி கமாண்டோ படையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திறந்தவெளி மலம் கழித்தலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ், தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்ட ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

56,615 வீடுகள் இலக்கு

கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 2.26 லட்சம் வீடுகள் உள்ளன. இவற்றில் 56,615 வீடுகளில் கழிப்பிடம் இல்லை எனக் கண்டறியப்பட்டு, அவற்றில் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியது:

பொதுவாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மழை பெய்யும்போது கழிவுகள் குடிநீர் ஆதாரங்களில் கலந்து, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் கட்டி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மாற்ற முழு முயற்சி எடுத்து வருகிறோம்.

ஊராட்சிப் பகுதிகளில் இதுவரை 18,548 தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள வீடுகளிலும் வரும் 2017-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கழிப்பிடத்தை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும் முழுமுயற்சி மேற்கொண்டுள்ளோம்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், புதுவாழ்வுத் திட்ட அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலர்கள், ஊக்குவிப்பாளர்கள் மூலம், பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கல்வி, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சத்துணவுத் திட்ட அலுவலர்கள் மூலம், கழிப்பிடம் இல்லாதவர்களின் வீடுகள் கண்டறியப்பட்டு, அங்கு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்

மாவட்டத்தில் உள்ள 560-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு ‘குட்டி கமாண்டோ படை’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள், ஊக்குவிப் பாளர்களுடன் அதிகாலையில் வயல், காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களை ‘விசில்’ அடித்து தடுத்து நிறுத்தி, அதன் தீமைகள், கழிப்பிடம் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குவர். இதற்காக அந்த மாணவர்களுக்கு தனி பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிறப்பாகப் பணியாற்றும் மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பேரூராட்சிகளில்…

இதேபோல மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளில் 16,112 கழிப்பிடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 3,611 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றனர்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியுடன் கட்டப்பட்டும் தனிநபர் இல்லக் கழிப்பிடம். (அடுத்த படம்) விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடும் குட்டி கமாண்டோக்கள்.

மலைவாழ் மக்களை பாதுகாக்க…

கோவை மாவட்டம் காரமடை, பி.என்.பாளையம், மதுக்கரை, ஆனைமலை, தொண்டாமுத்தூர் வட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களிலும் தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பொதுவாக, அதிகாலை நேரங்களில் மலம் கழிக்கச் செல்லும் மலைவாழ் மக்கள், யானை, கரடி, காட்டெடுருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது, விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து அவர்கள் தப்ப முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x